சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராகப் பணிபுரிந்த 55 வயது நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் சைமன் கரோனா உறுதி செய்யப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய அண்ணா நகர் வேலங்காடு பகுதிக்கு கொண்டு சென்றனர். அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கற்கள், உருட்டுக்கட்டைகளாால் தாக்கினர். இதில், ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைந்தது. ஊழியர்களும் காயமடைந்தனர். பின்னர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களது உதவியுடன் இரவு 1 மணியளவில் மருத்துவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வு மருத்துவர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்காக உழைக்கும் தங்களைப் போன்ற ஒருவருக்கு இந்த நிலைமை நேர்ந்தது மிகுந்த வருத்தமளிப்பதாகக் கூறியுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த மருத்துவரின் நண்பர் உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர், “நேற்று மருத்துவர் சைமன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை நாங்கள் 9 மணிக்கு வாங்கினோம். உடலை அடக்கம் செய்ய அண்ணா நகர் வேலங்காடு கல்லறைக்கு கொண்டு சென்றோம். அதற்கு அரசும் தன்னால் இயன்ற அத்தனை உதவியையும் செய்தது.
நாங்கள் அங்கு சென்றுகொண்டிருந்தபோது, 50க்கும் மேற்பட்ட அடியாட்கள் போன்றவர்கள் கையில் கற்கள், உருட்டுக் கட்டைகளுடன் இடைமறித்தார்கள். மருத்துவரின் உடலை இங்கு அடக்கம் செய்யக்கூடாது என்று எங்களிடம் வாதம் செய்தார்கள். நாங்கள் எவ்வளவு எடுத்துக் கூறியும் அவர்கள் கேட்காமல் நாங்கள் சென்ற ஆம்புலன்ஸ் மீது கல்லெறிந்து, எங்களை கட்டைகளால் சரமாரியாக அடித்து உதைத்தனர்.
அவர்கள் இப்படி செய்வார்கள் என நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. சைமன் யாருக்காக உழைத்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாரோ, அம்மக்களே அவரது உடலை அடக்க செய்யவிடாமல் தடுப்பார்கள் என்று ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை. அவர் மக்களுக்கு சிகிச்சையளிக்காமல் இருந்திருந்தால் இன்று அவர் உயிருடன் இருந்திருப்பார்.
எங்கள் நண்பரை இழந்த சோகத்திலிருந்த நாங்கள் அவரது உடலையாவது நல்லடக்கம் செய்யலாம் என்று நினைத்தோம். ஆனால் அவரது உடலை அங்கேயே விட்டுவிட்டு ஓடும் அவலநிலைக்கு தள்ளப்பட்டோம். சமூகத்தில் தன்னை ஒரு மருத்துவராக நிரூபித்தார். மனிதநேயத்திற்கு எடுத்துக்காட்டாய் திகழ்ந்த அவருக்கு இப்படி நடந்ததால், மருத்துவ பணி செய்வதையே பெரும் தலைகுனிவாக எண்ணுகிறேன்.
நோயால் இறப்பவர்களால் மற்ற பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது. இதுகுறித்து பொதுமக்களுக்குத் தேவையான விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும். வெறும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மக்களுக்கு தகுந்த விழிப்புணர்வை அரசும் ஊடகத் துறையும் கொண்டு சேர்க்க வேண்டும்” என்று கண்ணீர் ததும்பும் கண்களோடு பேசியுள்ளார்.
இதையும் படிங்க: கல்லறையில் மரித்த மனிதம்... கரோனாவால் உயிரிழந்த டாக்டர் உடலைப் புதைக்க மக்கள் எதிர்ப்பு!