சென்னை மாநகராட்சியில் கரோனா தடுப்பூசிப் போடும் பணி, டெங்கு முதலான தொற்று நோய்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.
இதில் இணை ஆணையாளர் (சுகாதாரம்) திவ்யதர்ஷினி, மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன், மாநகர மருத்துவ அலுவலர் டாக்டர் ஹேமலதா உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், 'சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள், காவல் துறை, தீயணைப்புத்துறை முதலான பணியாளர்கள் அனைவருக்கும் விரைவில் கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சென்னையில் தினந்தோறும் குறைந்தபட்சம் 12 ஆயிரம் நபர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு, அதன் விவரத்தினை குறுஞ்செய்தியாக மேற்குறிப்பிட்ட பணியாளர்களுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சுகாதார ஆய்வாளர்கள், தூய்மைப் பணி அலுவலர்கள் மூலம் கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை முன்களப் பணியாளர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
கொசுப்புழு தடுப்புப் பணியாளர்களை கொண்டு வீடு வீடாகச் சென்று கொசுப்புழு வளரும் இடங்களை கண்டறிந்து அழித்தல், மேல்நிலைத் தொட்டி மூடிய நிலையில் உள்ளனவா என்று ஆய்வு செய்தல் போன்ற பணிகளைத் தீவிரப்படுத்தி, முந்தைய காலகட்டங்களில் டெங்கு பாதித்த பகுதிகளை ஹாட் ஸ்பாட் ஆக கருதி, அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த வேண்டும்.
நீரினால் பரவும் தொற்று நோய்களைக் கட்டுப்படுத்த குடிநீரில் குளோரின் அளவை சரிபார்த்தல், குடிசைப் பகுதி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் கூட்டுப் பணியாக சுத்தம் செய்தல் போன்ற பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்' உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதையும் படிங்க: தடுப்பூசி வேண்டும்: மோடிக்கு கால் செய்த ஜஸ்டின் ட்ரூடோ!