சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று (நவம்பர் 21) நடைபெற்ற பத்தாவது மெகா கரோனா தடுப்பூசி முகாமில் (Corona vaccinate) 18.21 லட்சம் பயனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதலமைச்சரின் உத்தரவுப்படி தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி, சத்துணவு மையங்கள், பள்ளிகள், முக்கிய இடங்களில் மெகா கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
18.21 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தல்
இதில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்துப் பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசியின் முதல், இரண்டாம் தவணை செலுத்தத் திட்டமிடப்பட்டது. இதுவரை நடைபெற்ற ஒன்பது மெகா கோவிட் தடுப்பூசி முகாம்கள் பற்றிய விவரம் பின்வருமாறு:
முதலாவது முகாம் (செப்டம்பர் 12) - 28.91 லட்சம்
இரண்டாவது முகாம் (செப்டம்பர் 19) - 16.43 லட்சம்
மூன்றாவது முகாம் (செப்டம்பர் 26) - 25.04 லட்சம்
நான்காவது முகாம் (அக்டோபர் 3) - 17.04 லட்சம்
ஐந்தாவது முகாம் (அக்டோபர் 10) - 22.85 லட்சம்
ஆறாவது முகாம் (அக்டோபர் 23) - 23.27 லட்சம்
ஏழாவது முகாம் (அக்டோபர் 30) - 17.20 லட்சம்
எட்டாவது முகாம் (நவம்பர் 14) - 16.40 லட்சம்
ஒன்பதாவது முகாம் (நவம்பர் 18) - 8.36 லட்சம்
இந்நிலையில் நேற்று (நவம்பர் 21) நடைபெற்ற பத்தாவது மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்களில், 18 லட்சத்து 21 ஆயிரத்து ஐந்து பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
அமைச்சர் நேரில் ஆய்வு
இதில் முதல் தவணையாக ஆறு லட்சத்து 72 ஆயிரத்து 580 பயனாளிகளுக்கும், இரண்டாவது தவணையாக 11 லட்சத்து 48 ஆயிரத்து 425 பயனாளிகளுக்கும் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இதுவரை 75.75 விழுக்காடு முதல் தவணையாகவும், 39.53 விழுக்காடு இரண்டாம் தவணையாகவும் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற கோவிட் தடுப்பூசி முகாம்களை மா. சுப்பிரமணியன் நேரில் ஆய்வுசெய்தார். மேலும் நேற்று நடைபெற்ற பத்தாவது மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமினையடுத்து, தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 22) கோவிட் தடுப்பூசி பணிகள் நடைபெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக போல் திமுக அரசும் பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும்- ஜெயக்குமார்