சென்னையில் குறைந்துள்ள கரோனா பரவல் விகிதம்! - கரோனா பரவல் விகிதம்
சென்னை: கரோனா பரவல் சென்னையில் 18.6 விழுக்காடு குறைந்துள்ளது என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. அண்ணா நகர், கோடம்பாக்கம், போன்ற சில மண்டலங்களில் மட்டும் தொற்றுப் பரவல் சற்று அதிகரிப்பதாகத் தெரிகிறது.
அண்ணா நகர், அம்பத்தூரில் சிகிச்சைபெற்று வருபவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. அவற்றைக் குறைக்க அந்தந்த மண்டலங்களில் அதிக மருத்துவ முகாம்களும், விழிப்புணர்வு நிகழ்வுகளும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகின்றன. நேற்று (மே 21) மட்டும் சென்னையில் 31 ஆயிரத்து 814 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 5 ஆயிரத்து 913 நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை வைத்து பார்த்தால் சென்னையில் கரோனா பரவல் விகிதம் 18.6 விழுக்காடாக குறைந்துள்ளது. 100 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்து அதில் கரோனா உறுதிசெய்யப்படுவோர் எண்ணிக்கையை வைத்து கரோனா பரவல் விகிதம் கணக்கீடப்படுகிறது. அதன்படி சென்னையில் மே 10ஆம் தேதி 26.6 விழுக்காடாக இருந்தது தொற்று பாதிப்பு விகிதம் படிப்படியாக குறைந்து தற்போது 18.6 விழுக்காடாக உள்ளது.
30-39 வயது உடையவர்கள் அதிக அளவில் கரோனா தொற்றால் (22.05 விழுக்காடு) பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 4 லட்சத்து 68 ஆயிரத்து 262 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4 லட்சத்து 13 ஆயிரத்து 266 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 48 ஆயிரத்து 782 பேரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் 6 ஆயிரத்து 124 பேர் இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: இன்றும், நாளையும் 4,500 பேருந்துகள் இயக்கம்