சென்னை: இந்தியாவில் கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகி வருகிறது. இந்த நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப்.8) காணொலி காட்சி வாழியாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். இந்த கலந்தாய்வில், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முனைவர் ராஜீவ் ரஞ்சன், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, வருவாய் நிருவாக ஆணையர், கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ . ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் டாக்டர் பி . உமாநாத், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் மற்றும் இணை இயக்குநர் டாக்டர் வினய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் தற்போது கரோனா தொற்று 4 ஆயிரத்தை கடந்து கொண்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடி உடனான இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் எடுத்துரைத்தார். தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தவித தளர்வுகள் இல்லாமல் முழுப் ஊரடங்கு கடைபிடிக்கப்படும்.
நாளை மறுநாள்(ஏப்.10) முதல் கோயம்பேட்டில் சில்லரை காய்கறிகள் விற்பனைக்கு தடை, மாவட்டங்களில் உள்ள சில்லரை காய்கறி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாளை (ஏப்.9) முதல் திருவிழாக்களுக்கு தடை, வழிபாட்டுத்தலங்கள் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி, திருவிழாக்கள் மத கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து விளக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, சென்னை மாவட்டத்தில் 15 கண்காணிப்பாளர்கள், மற்றும் 35 மாவட்டத்திற்கு மூத்த இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் தலைமையிலான மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை உயர் அலுவலர்கள் மற்றும் பொது சுகாதாரத்துறையின் துணை இயக்குநர் நிலை மற்றும் அதற்கு மேல் உள்ள மருத்துவ அலுவலர்களை உள்ளடக்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடிக்கு எடுத்து கூறப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: கோயம்பேட்டில் சில்லரை விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் - வியாபாரிகள் கோரிக்கை!