சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் தாயகம் கவி, தமிழ்நாட்டில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட ஐந்து மாவட்டங்களில், புதிய நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை எனவும், நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழை அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், “மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அவர்களின் தாய்மொழியில் வழக்குகள் கையாளப்படுகின்றன. திமுக ஆட்சியில், நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அமல்படுத்த முயற்சித்தோம். அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த உங்களது கூட்டணிக் கட்சி அனுமதியைப் பெற தவறவிட்டீர்கள். அதன்பின் ஆட்சிக்கு வந்த அதிமுக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது” எனத் தெரிவித்தார்.
மீண்டும் பேசிய தாயகம் கவி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் 14.10 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன எனவும், வழக்குகளை விரைந்து தீர்க்க போதுமான நீதிமன்றங்களை ஏற்படுத்துவதுடன், நீதிபதிகள், பணியாளர்களை அதிகளவில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், சிறைகளில் உள்ள கைதிகளுக்கு, கரோனா தொற்று ஏற்படாத அளவிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த சி.வி. சண்முகம், “கைதிகளுக்கு கரோனா தொற்று ஏற்படாத அளவிற்கு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வழக்கறிஞர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன” என்றார்.
இதையும் படிங்க...தமிழ்நாட்டில் போராட்டங்களுக்கு அனுமதியில்லை