மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்தவுடன் பணியில் சேர வழிவகை செய்யும் கேம்பஸ் இண்டர்வியூக்கள் குறித்து அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்புத் துறை இயக்குனர் இனியன் ஈ.டிவி பாரத்திற்கு பேட்டியளித்தார். அதில், “அண்ணா பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் மாதம் முதல் நடைபெற்ற வளாகத் தேர்வுகளில் 22 நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. அந்த நிறுவனங்களில் 167 மாணவர்கள் வேலைவாய்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆண்டிற்கு 20 லட்சம் முதல் முப்பது லட்சம் வரை சம்பளமாகக் கிடைக்கும். மேலும் 14 நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு 77 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் மாணவர்களைத் தேர்வு செய்யும் பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது. எழுத்துத் தேர்வு, நேர்காணல், குழு விவாதம் ஆகிய அனைத்தும் ஆன்லைன் மூலமே நடத்தப்படுகிறது. கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு வேலைவாய்ப்பு முகாம் தாமதமாக ஆரம்பித்தாலும், தற்போது நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதத்தில் டிசிஎஸ், இன்போசிஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் மாணவர்களை தேர்வு செய்ய வருகின்றனர். இதனால் தேர்வு செய்யப்படும் பொறியாளர்களின் எண்ணிக்கை அடுத்த மாதம் சுமார் 1500க்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகளில் 2,500 மாணவர்கள் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் தேர்வாகி உள்ளனர். கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி போன்ற பாடப் பிரிவுகளில் மாணவர்கள் அதிக அளவில் வேலையில் சேர்கின்றனர். மேலும் மின்னணுவியல் போன்ற துறைகளிலும் மாணவர்கள் அதிக அளவில் தேர்வு செய்யப்படுகின்றனர். கரோனா தொற்றுப் பரவல் உலகம் முழுவதும் இருப்பதால் ஆன்லைனில் பணப் பரிவர்த்தனையின் தேவைகள் அதிகரித்துள்ளது.
எனவே வங்கித் துறைகளுக்கான சாஃப்ட்வேர் தயாரிக்கும் நிறுவனங்கள், அதனுடன் தொடர்புடைய சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் தொழிலாளர்களின் தேவை அதிகரித்துள்ளது. சிட்டி கார்ப் என்ற நிறுவனம் கடந்த ஆண்டு 27 பொறியாளர்களைத் தேர்வு செய்த நிலையில், இந்த ஆண்டு 54 பொறியாளர்களைத் தேர்வு செய்துள்ளது. மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில் எந்தவித பாதிப்புமின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...அவமதித்த எம்.பி.க்கள்... ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க மாநிலங்களவை துணைத்தலைவர் முடிவு!