சீனாவில் உருவான கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் இதுவரை ஐந்தாயிரத்திற்கும் அதிகமானோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதில் தங்களின் அன்றாட வருமானத்தை வைத்து வாழ்க்கை நடத்திய ஆட்டோ ஒட்டுநர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து திருவல்லிக்கேணியில் ஆட்டோ ஓட்டும் சுப்பிரமணி கூறுகையில், "144 தடை உத்தரவு பிறப்பித்ததிலிருந்து எங்களுக்கு வேலை இல்லாமல் போய் விட்டது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. காலை ஆறு மணி முதல் ஒரு மணி வரை அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு செல்கின்றனர். எங்கள் தொழில் சுத்தமாக படுத்துவிட்டதால் வீட்டில் சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் தவிக்கிறோம். அரசாங்கம் 1000 ரூபாய் கொடுப்பதாக சொல்கிறார்கள். நிச்சயம் அது எங்களுக்கு போதியதாக இருக்காது” என்கிறார் கவலை நிறைந்த கண்களுடன்.
இருப்பு வைத்து பிழைக்கும் அளவிற்கு இவர்கள் தொழிலில் வருமானம் வருவதில்லை. அதனால் ஒருவேளை ஊரடங்கு நீட்டிக்கப்படும் பட்சத்தில், ஆட்டோ ஓட்டுநர்கள் நிலையை கருத்தில் கொண்டு அரசு உதவிகள் செய்ய முன் வர வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க...கேன்சர் மருந்து கிடைக்காமல் தவித்த தமிழ்நாட்டு நோயாளி; கைகொடுத்த கேரளா!