சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று முதல் அலை 2020 மார்ச் மாதம் தொடங்கியது. ஓரளவு கட்டுப்படுத்தபட்ட நிலையில் 2ஆம் அலை 2021 மே மாதம் ஆரம்பமானது. அந்த கால கட்டத்தில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். நாள் ஒன்றுக்கு 26 ஆயிரம் என அதிரித்துக்கொண்டே இருந்த நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக ஒரு சில மாதங்களில் கரோனா குறையத் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து 3ஆவது அலை தற்பொழுது வரை இருந்து வருகிறது.
கடந்த மார்ச் மாதத்தில் கரோனா வெகுவாக குறைந்துவிட்ட காரணத்தால் சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் விலக்கிக் கொள்ளப்பட்டன. ஆனாலும் மக்கள் பொது இடங்களில் தொடர்ந்து கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற விதிமுறை செயல்பாட்டில் இருந்து வருகிறது.
தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் அரசு அறிவுறுத்தி வருகிறது. வெளிநாடுகள் மற்றும் வட மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி சென்னை ஐஐடியில் ஒருவருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை ஐஐடியில் 1,420 பேரை சோதனை செய்ததில் 60 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றின் 4ஆவது அலை ஜூன் மாதம் வர வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து இருக்கின்றனர்.
இது குறித்து இந்தியாவில் கரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து ஏப்ரல் 27ஆம் தேதி மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் நாளை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனையில், தலைமைச்செயலாளர் இறையன்பு, அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறைச்செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், வருவாய் பேரிடர் துறை உயர் அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர்.
இந்த கூட்டத்தில் கராேனா பரவலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விவாதிக்க உள்ளனர்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டை உலுக்கும் மின்வெட்டு - காலம் திரும்புகிறதா?