தமிழ்நாட்டில் கரோனோ வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. விமானம், ரயில் பயணிகள் வெப்ப பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனிடையே ஓமன் நாட்டிலிருந்து தமிழ்நாடு திரும்பிய ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. தற்போது அவருக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தைச் சார்ந்த ஒருவர் கடந்த 8, 9ஆம் தேதிகளில் டெல்லியில் இருந்துள்ளார். டெல்லியில் இருக்கும்போதே கரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததால் அவர் மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கிருந்து 10ஆம் தேதி புறப்பட்டு ரயில் மூலம் சென்னை வந்துள்ளார்.
ரயிலிலிருந்து இறங்கி அவர் சென்னையிலுள்ள தனது நண்பர்களுடன் தங்கியிருந்துள்ளார். அவருக்கு நோயின் தாக்கம் அதிகரிக்கவே சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த 16ஆம் தேதி வந்துள்ளார். அவரின் ரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்த பின், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அதிகாரப்பூர்வமாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், தொடர்ந்து ராஜீவ் காந்தி மருத்துவமனையிலுள்ள தனி வார்டில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு நல்ல நிலையில் உள்ளார் எனவும் அதில் கூறியுள்ளார். அரும்பாக்கத்தில் அந்நபருடன் இருந்த நண்பர்களைத் தொடர்ந்து கண்காணிக்கும் பணியை சுகாதாரத் துறை முடுக்கிவிட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனாவை அலட்சியமாக கையாண்ட பெண்ணின் தந்தை மீது எஃப்ஐஆர் பதிவு!