சென்னையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வரும் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
குறிப்பாக ஊரடங்கின் போது பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளைத் தவிர, வீட்டை விட்டு வெளியே வராமல் தடுக்கவும், கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்துவது குறித்தும் ஆலோசனைக் கூட்டம் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தலைமையில் இன்று (ஜூன் 15) நடைபெற்றது.
குறிப்பாக முழு ஊரடங்கின் போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் பொதுமக்கள் விதிமுறைகளை கடைப்பிடிக்க செய்வது குறித்த ஆலோசனையும் நடத்தப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே சுற்றும் நபர்களை பிடிக்க சென்னை முழுவதும், முக்கிய சாலைகளில் 400க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகளை அமைத்து தீவிரமாக கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், முழு ஊரடங்கின் போது அவர்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனையும் காவல் ஆணையர் வழங்கியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர்கள், இணை மற்றும் துணை ஆணையர்கள், போக்குவரத்து காவல் அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.