கரோனா வைரஸ் உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்துவருகிறது. இந்தியாவில் தாமதமாக வைரஸ் ஊடுருவினாலும் தற்போது அதன் வீச்சு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும்விதமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி மக்கள் ஊரடங்குக்கு வேண்டுகோள்விடுத்திருந்தார். அதனை ஏற்று மக்களும் தங்களது வீட்டுக்குள்ளேயே தங்களைத் தற்காத்துக்கொண்டனர்.
இந்தப் பெருந்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள இது ஒன்றுதான் வழி; அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், மாலையில் அனைவரும் வீட்டிற்கு வெளியே வந்து கை தட்டுங்கள் எனப் பிரதமர் சொன்னதும் பெரும்பாலானோர் கூட்டம் கூட்டமாக வெளியே வந்து கைகளைத் தட்டியது, மணியை ஆட்டியது என மக்கள் செய்த செயல், நாள் முழுக்க அடைகாத்த தனது குஞ்சைத் தானே கொல்வது போன்றது.
மோடியின் இந்த அறிவிப்பும், மக்களின் இந்தச் செயலும் சுகாதார செயற்பாட்டாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது இப்படி என்றால் தமிழ்நாடு அரசு சார்பில் இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்கூறியது போல்தான் இந்தத் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள இதுதான் ஒரே வழி.
ஆனால் அந்த வழி சரியான முறையில் போடப்பட்டிருக்கிறதா என்று கேள்வி எழுந்தால் அதற்கு இல்லை என்பதுதான் பதில். வீட்டுக்குள் இருக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டால் சென்னையில் வசிக்கும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காகக் கோயம்பேட்டை முற்றுகையிட்டனர்.
மக்கள் மீது பல விமர்சனங்கள் வைக்கலாம். ஆனால் சென்னையில் பணிபுரிபவர்களில் அதிகளவு பேச்சிலர்கள். ஊரெங்கும் கடை இல்லை என்றால் தங்களால் அத்தியாவசிய தேவைகளுக்கு என்ன செய்ய முடியும் என்பது அவர்கள் தரப்பு வாதமாக இருக்கிறது. அந்த வாதம் நியாயமானதும்கூட. சொந்த ஊருக்குச் செல்பவர்கள் மட்டும் இப்படியல்ல; அத்தியாவசிய கடைகள் இயங்கும் என அறிவிப்பு வெளியான பிறகும் சென்னைவாசிகள் தங்களுக்கான அத்தியாவசிய பொருள்களை மூட்டை மூட்டையாக ஒரேநாளில் அள்ளிச் சென்றனர்.
அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் தொடர்ந்து இயங்கும் என்று முதலமைச்சர் அறிவித்தார்தான். இருந்தாலும் மக்கள் அவ்வளவு ஏன் கூடினார்கள், ஒரேநாளில் அள்ளிச் செல்ல ஏன் துடித்தார்கள், இது எதைக் காட்டுகிறது? என்றால்...
- அரசின் அறிவிப்பு மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையின்மையை மீண்டும் ஒருமுறை அது வெளிச்சமிட்டு காட்டியிருக்கிறது.
இன்று மாலை முதல் ஊரடங்கு உத்தரவு என்று அரசு அறிவித்தது. மக்கள் நேற்றிலிருந்தே பதற்றமானார்கள். அரசின் பணி தனது அறிவிப்பின் மூலம் மக்களைப் பதற்றமாக்கிவைப்பது இல்லை. எந்த இக்கட்டான சூழல் வந்தாலும் மக்களைக் காப்பதுதான். இன்னும் சொல்லப்போனால் ஊரடங்கு உத்தரவைக் கண்டு மக்கள் அஞ்சுவதைப் போக்கும் அனைத்து பொறுப்பும் அரசுக்கு மட்டுமே இருக்கிறது.
நேற்றுமுதல் கோயம்பேடு, பெருங்களத்தூர் உள்ளிட்ட இடங்களில் மக்கள் முண்டியடித்து பேருந்தை சிறைப்பிடிக்காத குறையாக அடித்துப்பிடித்து ஏறினர். ஆனால், அங்கு கூடுதல் பேருந்துகள், மக்களை ஒழுங்குப்படுத்த காவல் துறையினரை நிறுத்தியிருக்க வேண்டியது அரசின் கடமையல்லவா!
சூப்பர் ஸ்டார் ரஜினியோ தனது ட்விட்டர் பக்கத்தில், '12 முதல் 14 மணி நேரம்வரை கரோனா பரவாமல் இருந்தாலே அது மூன்றாவது நிலைக்குச் செல்லாது' என்று ஒரு காணொலி பதிவிடுகிறார். இது எவ்வளவு பெரிய அபத்தம். தமிழ்நாட்டில் போருக்குத் தயார் என்று அறிவித்து பின் மக்கள் எழுச்சி அலைக்காகக் காத்திருக்கும் அவர், தான் ஒரு தவறான தகவலைச் சொன்னால் அது மக்களுக்குச் சென்று சேரும் என்ற பொறுப்புணர்வு கொஞ்சமேனும் வேண்டாமா?
அரசுத் தரப்பு இப்படி என்றால் மக்கள் தரப்பிலும் குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. இந்த வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு மத்திய-மாநில அரசுகள் தங்களால் முடிந்த அளவு அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் செய்துவருகின்றன. ஆனால், அதற்கு மக்களும் ஒத்துழைப்பு தந்தால்தான் அது சாத்தியமாகும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் இரு விழிகளில் பார்த்தால்தானே உலகம் தெளிவாகத் தெரியும்.
விடுமுறை என்றாலே எதற்காகக் கொண்டாட்ட மனநிலைக்குச் செல்ல வேண்டும். அரசு தெளிவாகச் சொல்லியிருக்கிறதே... இந்த வைரஸ் எப்படிப் பரவுகிறது என்று. ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சாலையில் கூடி கிரிக்கெட் விளையாடுவது, நண்பர்களுடன் ஊர் சுற்றுவது என மக்கள் செய்த செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது.
‘இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே’ என்ற கண்ணதாசனின் வரிக்கு தகுந்தவாறு மக்கள் அவரவர் இடத்தில் இருந்துகொண்டால் மட்டுமே அனைவருக்கும் நலம். முக்கியமாக இந்த விடுமுறையோ, ஊரடங்கு உத்தரவோ ஊர் சுற்றுவதற்கு இல்லை. தன்னையும், ஊரையும் காத்துக்கொள்வதற்காக மட்டுமே. சொந்த ஊருக்குச் சென்றால் பாதுகாப்பு கிடைக்கும், அதனால் சொந்த ஊருக்குச் செல்கிறோம் என்று மக்கள் கூறுவது நியாயம்தான். ஆனால் சுனாமியோ, பூகம்பமோ தற்போது வரவில்லை. அப்படி வந்திருந்தால் சொந்த ஊருக்குச் செல்லலாம். ஆனால், வந்திருக்கும் வைரஸ் எளிதாகப் பரவக்கூடியது.
பாதுகாப்புக்காக ஊருக்குச் செல்கிறேன் என்று கூறிக்கொண்டு செல்பவர்கள் மூலம் அவரது ஊரில் ஒருவேளை வைரஸ் பரவினால் அந்த ஊரின் நிலை? அரசால் எவ்வளவு செய்ய முடியும், எவ்வளவு பேரை பாதுகாக்க முடியும்? மக்களைப் பாதுகாக்கும் பங்கு அரசுக்கு என்றால், இதுபோன்ற நேரங்களில் அரசுக்கு இந்தப் பணியை எளிதாக்கிக் கொடுக்கும் பங்கு மக்களுக்கும் இருக்கிறது. அதை அவர்கள் கண்டிப்பாகப் புரிந்துகொள்ளத்தான் வேண்டும்.
சிறு நோயால் ஒரு ஊரில் சில உயிர்கள் போனாலே பதற்றத்திலும், பயத்திலும் மக்கள் பரிதவிப்பார்கள். இப்போது வந்திருக்கும் பெருந்தொற்றால் உலகம் முழுவதும் மனித உயிர்கள் கொத்துக் கொத்தாகப் போய்க்கொண்டிருக்கின்றன.
இந்த நேரத்தில் வைரஸ் குறித்த வதந்திகளைப் பரப்புவது எந்தவிதத்தில் அறம். சமூகத்தின் மீதான, மக்களின் மீதான பொறுப்பு அரசுக்கு மட்டும்தான் இருக்கிறது என்பதைவிட்டு சக மனிதன் மீது இன்னொரு மனிதனுக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டிய நேரமிது.
இயற்கைப் பேரிடருக்கும் மனித அலட்சியத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அதிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்க அரசுகள் போதும். ஆனால், வைரஸ் தொற்று மனிதர்களுடைய அலட்சியத்தால் பரவி இருக்கிறது. இந்தப் பரவலிலிருந்து மக்களைப் பாதுகாக்க அரசுக்கு மட்டுமே நேரமும், பலமும் போதாது.
இந்நேரத்தில் அரசுக்குத் துணைநின்று ஒத்துழைக்காவிட்டால் மனித இனம் செய்த தவறுகளில் இதுவே பெரிய தவறு என்று வருங்காலத்தில் எழுதப்படும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் மக்களுடன் அரசும், அரசுடன் மக்களும் கைகோக்க வேண்டுமென்பதே யதார்த்தம். அதுதான் ஒரே வழியும்கூட!