சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இன்று(ஏப்.5) இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில், தமிழ்நாடு மூலிகைப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகம் (டாம்ப்கால்) தயாரித்துள்ள ஆறு அழகு சாதனைப் பொருட்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகப்படுத்தி வைத்தார். அதன்படி, இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மூலிகை ஷாம்பு, மூலிகை ஃபேஸ் பவுடர், மூலிகை சோப் உள்ளிட்ட ஆறு அழகு சாதனைப் பொருட்கள் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "175 வகையான சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருந்துகள் தயாரிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மூலிகை சன் ஸ்கிரீன், செறிவூட்டப்பட்ட மூலிகை தைலம், ஹேர் டை உள்ளிட்டவை விரைவில் கொண்டு வரப்படும். 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 11 வகையான மருந்துகள் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கரோனா பெருந்தொற்று நேற்று இந்திய அளவில் 3,000 பேருக்கு மேல் உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 198 என்ற அளவில் பாதிப்பு உயர்ந்துள்ளது. ஒமைக்ரானின் உருமாற்றம் அடைந்த XBB தொற்று பரவி வருகிறது. மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று இருந்தது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் அறிவுறுத்தல்படி கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பொதுமுடக்க காலகட்டங்களில் பொது சுகாதாரத்துறை சார்பில் விதிமுறைகள் விதிக்கப்பட்டன. அடிக்கடி கை கழுவுவது, தனிமனித இடைவெளி உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். அவை திரும்பப் பெறப்படவில்லை, அவற்றை மக்கள் பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் தற்போது ஒரு நபர் தொற்று மட்டுமே பெரிய அளவில் கண்டறியப்படுகிறது, குழு பரவல் கண்டறியப்படவில்லை.
ஜப்பான் போன்ற நாடுகளில் கரோனாவுக்கு முன்பு இருந்து சுற்றுப்புறத்தில் இருந்து, தங்களைப் பாதுகாக்க முகக்கவசம் அணிவார்கள். காவல் துறையினர் அபராதம் விதித்துதான் முகக்கவசம் அணிய வேண்டும் என்று இல்லை, முகக்கவசம் அவசியம் என்பதை பொது மக்கள் அறிந்து செயல்பட வேண்டும். நம்மை காத்துக்கொள்ள நல்ல வழி முகக்கவசம் அணிவது, அதனை பின்பற்றுங்கள்.
கரோனா தொற்று சமூகப் பாதிப்பாக மாறவில்லை, தனிமனிதப் பாதிப்பு தான் இப்போது உள்ளது. குடும்பம் முழுக்க பாதிக்கப்படுவது என்று இல்லை. தொற்று பாதிக்கப்படுபவர்களும் தீவிர சிகிச்சைக்கு அனுப்பப்பட வேண்டிய சூழல் எதுவும் ஏற்படவில்லை, அதனால் பயம் கொள்ளத் தேவையில்லை. வரும் 10, 11ஆம் தேதிகளில் மத்திய அரசு சார்பில் மருத்துவ கட்டமைப்பு தயாராக இருக்கிறதா? என்று ஒரு ஆய்வுத் திட்டத்தை தொடங்கச் சொல்லி இருக்கிறார்கள். அன்றைய தினம் ஏதாவது ஒரு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்" என்று கூறினார்.