திருச்சி - பொன்மலை ரயில்வே தொழிற்சாலையில், கடந்த 2009ஆம் ஆண்டு முதல் மக்கள் பயணிக்கும் பயணிகளின் அகல ரயில்பாதை பெட்டிகள், சரக்குகளை ஏற்றிச்செல்லும் ரயில் பெட்டிகளாக (New Modified coach- NMC) மாற்றப்பட்டு வருகிறது.
இதன்மூலம், புதிதாக உற்பத்தி செய்யப்பட்ட கார்கள், வாகனங்கள் ஆகியவற்றை தொழிற்சாலைகளில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள விற்பனை சந்தைகளுக்கு எடுத்துச்செல்லவும், கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.
2017ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை பொன்மலை ரயில்வே தொழிற்சாலையில் 140 ரயில் பெட்டிகள் கார்களை ஏற்றிச்செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மேலும் 10 ரயில் பெட்டிகளை மாற்றும் பணி நிறைவடைந்தது. இதனையடுத்து, திருச்சி பொன்மலை ரயில்வே தொழிற்சாலை மேலாளர் ஷயமதர் ராம் 150 ஆவது பெட்டியை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
பயணிகள் ரயில் பெட்டிகள் தலா 8 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் செலவில் (New Modified coach- NMC) சரக்கு பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது. கார்கள் ஏற்றுமதி மூலமாக ரயில்வே துறைக்கு அதிக லாபம் கிடைக்கிறது. குறிப்பாக, கரோனா பாதிப்புக்கு பின் ரயில்கள் மூலம் வாகனங்கள் ஏற்றிச் செல்லப்படுவது அதிகரித்துள்ளது.
தென்னக ரயில்வேயின் முக்கிய வாகனப் போக்குவரத்து முனையமாக வாலாஜாபாத் செயல்பட்டு வருகிறது.