தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. சென்னையிலும் நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்புகளே பதிவாகி வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரடங்கு தளர்வால் சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்தது. அப்போது பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை மாநகராட்சி அதிகாரிகள் கண்டறிந்து அந்த தெருக்களுக்குச் சீல் வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் சென்னையில் வடபகுதியில் நோய்த்தொற்று குறைந்து மத்திய பகுதியான அண்ணா நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை போன்ற பகுதிகளில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நோய் பரவலைத் தடுக்க மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இப்பகுதியில் தெருவில் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் அந்த முழு தெருவையும் தனிமைப்படுத்திக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து வந்தது. இதனால் மக்கள் சிரமத்திற்குள்ளாவதால் தெருவில் 3 முதல் 5 நபர்களுக்கு கரோனா ஏற்பட்டால் மட்டுமே அந்த முழு தெருவையும் தனிமைப்படுத்திக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக தற்போது அறிவிக்கப்படுகிறது.
முன்பு கரோனா நோய்த் தொற்று அதிகரித்துக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகரித்துக்கொண்டே சென்றது. மாநகராட்சியின் பல்வேறு நடவடிக்கையால் தற்போது நோய்த் தொற்று குறைந்துள்ளது. இதன் மூலம் குணமடைந்தவரின் சதவீதம் 94ஆக உயர்ந்துள்ளது. இதனால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 12ல் இருந்து 4 ஆக குறைந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த 4 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான வசதிகளை மாநகராட்சி தன்னார்வலர்கள் செய்து வருகின்றன.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்தில் 3 தெருக்களும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் தலா ஒரு தெருவும் என 4 தெருக்களுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.