சென்னை: சென்னை துறைமுகத்தில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான கண்டெய்னர் லாரிகள் மூலமாக சரக்குப் பொருள்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படுகின்றன. அதிகளவிலான கண்டெய்னர்கள் கையாளப்படுவதால், சென்னை முழுவதும் 33 இடங்களில் சரக்கு கையாளும் பெட்டக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் திருவொற்றியூர் பகுதியில் அதிக பாரம் ஏற்றிவந்த கண்டெய்னர் லாரிகளுக்கு ஏழு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது இது குறித்து தமிழக கண்டெய்னர் உரிமையாளர் சங்க செயலாளர் அருள்குமார் செய்தியாளரிடம் பேசினார்.
![அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13180871_contaibner-1.jpg)
கண்டெய்னர் லாரிகள் அபராதம் விதிப்புக்கு கண்டிப்பு
அவர் பேசுகையில், “நாங்கள் கடந்த 40 ஆண்டுகளாக சென்னை துறைமுகத்திலிருந்து கண்டெய்னர்களை லாரியில் எடுத்துவரும் பணிகளைச் செய்துவருகிறோம். சென்னை துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் கண்டெய்னர்களை சரக்கு கையாளும் பெட்டக மையத்திற்கும், சரக்கு கையாளும் பெட்டக மையத்திலிருந்து ஏற்றுமதியாகும் கண்டெய்னர்களை துறைமுகத்திற்கும் எடுத்துச் செல்கிறோம்.
இரண்டு இடங்களிலும் கண்டெய்னர் சீல் செய்யப்பட்டு அனுப்பப்படுவதால், கண்டெய்னர்களில் எவ்வளவு எடை உள்ளது என்பது எங்களுக்குத் தெரியாது. மேலும் எங்கள் வாகனங்களில் கண்டெய்னருடன் சேர்த்து 32 டன் வரையில் எடை ஏற்றலாம்.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சங்கம் இல்லாமல் செயல்படும் சிலர், அதிக எடை ஏற்றுவதாக அளித்த புகாரின்பேரில், எங்கள் வாகனங்களுக்கு அதிகளவில் எடை ஏற்றுவதாக அபராதம் விதிக்கப்பட்டது. இதனை நாங்கள் கண்டிக்கிறோம்.
துறைமுகப் பொறுப்பு கழகம் உறுதி செய்ய நடவடிக்கை?
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் துறைமுகத்தில், கண்டெய்னர் பொருள்களின் எடையை சென்னை துறைமுக பொறுப்பு கழகம் உறுதிசெய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அதிக பாரம் ஏற்றாமல் அரசு நிர்ணயித்த எடையை எங்களால் லாரிகளில் ஏற்ற முடியும்.
மேலும் இதன்மூலம் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஆகியோரின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். இந்த விவகாரத்தில் அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
அப்போது திடீரென சென்னை துறைமுக நுழைவு வாசலில் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் திரண்டதால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: Storming Operation - தமிழ்நாட்டில் இதுவரை 3,325 பேர் அதிரடி கைது