சென்னை: கரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வரக்கூடிய நிலையில், மூன்றாம் அலை ஏற்படாமல் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை ரிப்பன் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாநகராட்சி இணை, துணை ஆணையாளர்கள், மருத்துவ உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். மேலும் காணொலி வாயிலாக இந்தியாவின் மூத்த மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்றனர். அப்போது, சென்னையில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, வல்லுநர் குழுக்களுடன், மாநகராட்சி ஆணையர், அலுவலர்கள் ஆலோசனை நடத்தினர்.
மேலும் கரோனா தொற்று குறைந்து வந்தாலும், தொடர்ந்து RT-PCR பரிசோதனைகளை குறைக்காமலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரை கண்காணிக்க அரசு அலுவலகங்கள், காய்கறி சந்தைகள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு அவ்வப்போது RT-PCR பரிசோதனை மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட பாதிப்புகள் உள்ள நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்களா என்பது குறித்து மாநகராட்சி கண்காணிப்பாளர்கள் மூலம் கண்டறிந்து அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அலுவலர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் கரோனா தொற்று மூன்றாம் அலையின் பாதிப்பு தற்போது வரை எந்தெந்த நாடுகளில் ஏற்பட்டுள்ளது. அதனுடைய பாதிப்புகள், இரண்டாம் அலைக்கும் மூன்றாம் அலைக்கும் இடையே இருந்த கால அவகாசம் ஆகியவற்றைக் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
அதே போன்று இரண்டாம் அலைக்கு பிறகு கரோனா தடுப்பூசி செலுத்திய நாடுகளில் இறப்பு விகிதம், 10 விழுக்காட்டுக்கு மேல் குறைந்துள்ளதால் சென்னையில் விரைவாக தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்துவது குறித்து மருத்துவர்கள் சார்பாக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மூன்றாம் அலையின் பாதிப்பு ஏற்பட்டால் அதன் பாதிப்பு மூன்று மாதம் வரை நீடிக்கும் என்று தகவல் வெளியானதால், அதற்குத் தேவையான மருத்துவ நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கரோனா பாதித்தவர்களுக்குத் தடுப்பூசி தேவையில்லை: மருத்துவர்கள் அரசுக்கு பரிந்துரை!