சென்னை: சென்னை ஐஐடியில் கட்டுமானத் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை குறித்து ஆன்லைன் சான்றிதழ் படிப்பைத் தொடங்கியுள்ளது. இந்த படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20ஆம் தேதி கடைசி நாளாகும். குறிப்பிட்ட தகுதிகள் எதுவும் இல்லை என்றாலும், கட்டடக்கலை, சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அல்லது மேலாண்மை போன்ற பின்னணி இருந்தால் இதில் சேரலாம்.
இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி கூறும்போது, ''அனைவருக்கும் ஐஐடிஎம் (IITM for all) இலக்கை எட்டும் வகையில் அனைத்துத் தரப்பினருக்கும் ஐஐடி தரத்துடன் கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்குடன் இப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு பொறியாளருக்கும், ஆர்வமுள்ள தொழில் வல்லுநர்களுக்கும், மாணவர்களுக்கும் இந்த பாடத்திட்டத்தை கூறுவதற்கு நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான படிப்புகள் வடிவமைப்பு அடிப்படைகளை உள்ளடக்கி இருந்தாலும், இந்தத் துறையில் எதிர்பார்ப்புகள் என்னென்ன? கட்டுமானம் நடைபெறும் இடங்களை திறமையுடன் நிர்வகிப்பது எப்படி? என்பது பற்றிய அறிவை பெரும்பாலும் எவரும் வழங்குவதில்லை. திட்டப் பணிகளை சரியான நேரத்தில், குறைந்த செலவில், அதே நேரத்தில் உயர் தரத்தில் முடிக்க இத்திறமை அவசியமாகும். அந்த இடைவெளியை துல்லியமாகப் பூர்த்தி செய்யும் வகையில் இப்பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
கட்டுமான மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய, சிறந்த கல்வியாளர்கள் சென்னை ஐஐடியில் உள்ளனர். தொழில்நுட்ப நிபுணத்துவமும், சவாலான திட்டங்களில் தொழில் துறையினருடன் பணிபுரிந்த அனுபவமும் கொண்ட மூத்த ஆசிரியர் குழுவினர் பாடத்திட்டத்தை கற்பிப்பார்கள்.
மேலும், 126 மணி நேரத்திற்கு பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் வகுப்புகள், 42 மணி நேரம் ஆசிரிய நிபுணர்களுடன் ஆன்லைன் நேரடி கலந்துரையாடல் ஆகியவற்றுடன் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும்.
முதலாவது பிரிவு செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பிக்க குறிப்பிட்ட தகுதிகள் எதுவும் இல்லை என்ற போதிலும், கட்டடக்கலையான சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அல்லது மேலாண்மை போன்ற பின்னணி இருந்தால் விருப்பமுடையதாகும். ஆர்வம் உள்ளவர்கள் https://code.iitm.ac.in/construction-technology-and-management என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்'' எனத் தெரிவித்தார்.
இந்த பாடத்திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பாடத்திட்ட ஒருங்கிணைப்பாளரும், சென்னை ஐஐடி சிவில் இன்ஜினியரிங் துறை பேராசிரியருமான அஸ்வின் மகாலிங்கம் கூறும் போது, ''வரும் ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மற்றும் கட்டடங்களை மேம்படுத்துவதில் இந்தியா கணிசமான அளவுக்கு முதலீடு செய்யும். குறைந்த செலவில் உரிய நேரத்தில் கட்டி முடித்தல், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், மிக உயர்ந்த தரத்தைப் பேணுதல் அவசியமாகிறது.
பொறியாளருக்கான பயிற்சி பெறுவோர், பொறியாளராக விரும்புவோர் அனைவரும் அணுகக்கூடியதாக பாடத்திட்டம் அமைந்துள்ளது. அவர்களின் திறன்களை மேம்படுத்தக்கூடிய குறிப்பிட்ட கருவிகள் மற்றும் வழிகாட்டுதல்களை இதில் உள்ள அம்சங்கள் சரியாக வழங்கும்'' எனத் தெரிவித்தார்.
இப்பாடத் திட்டம் 10 தொகுதிகளைக் கொண்டுள்ளது. பொறியியல் பொருளாதாரம், கான்கிரீட் தொழில்நுட்பம், சாலை மற்றும் நடைபாதை தொழில்நுட்பம், கட்டுமானத் திட்டமிடல் மற்றும் கட்டுப்பாடு, கட்டுமான செயல்முறைகள் - உற்பத்தித்திறன், தரம், ஆயுட்காலம் மற்றும் பழுதுகள், பாதுகாப்பு, கட்டுமான காண்ட்ராக்ட்கள், குறைந்த வளத்திற்கு ஏற்ப திட்டமிடலை செம்மையாக்குதல் ஆகியவை குறித்து கற்பிக்கப்பட உள்ளது.
இந்த பாடநெறிகள் அனைத்தும் CODE மையத்தின் மூலம் வழங்கப்படும். 1986-ல் நிறுவப்பட்ட தொடர் கல்வி மையம் (CCE) தற்போது ஐஐடி மெட்ராஸ்-ன் சேவை மற்றும் ஆன்லைன் பாடத்திட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் ‘சென்டர் ஃபார் அவுட்ரீச் அண்ட் டிஜிட்டல் எஜுகேஷன்’ (CODE) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:விஷச்சாராயம் குடித்து 22 பேர் பலியான வழக்கு - இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!