முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி , முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் வன்முறைக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனர்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி, “ முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இந்தியாவின் வளர்ச்சிக்காகவும், வறுமையைப் போக்குவதற்காகவும், இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கும், இந்தியாவை வல்லரசாக மாற்றுவதற்காகவும் உயிர் கொடுத்தவர். வளர்ச்சி பெற்ற இந்தியாவை பாஜக தொடர்ந்து தவறானப் பாதையில் அழைத்து செல்கிறது” என்றார்.
மேலும், விசிக தலைவர் திருமாவளவன் முதலமைச்சரை சந்தித்தது குறித்துக் கேட்டபோது, ”ஒவ்வொரு கட்சிக்கும் தங்கள் கருத்தைக் கூற உரிமை உண்டு. சென்னை மாநகராட்சியை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்று கோர விசிகவுக்கு உரிமை உண்டு” என்றார்.
தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலினை அக்கட்சியினர் முன்நிறுத்துகிறார்களா என்றதற்கு, ”உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்தபின் கூட்டணிக் கட்சிகள் ஒன்றுகூடி முடிவு எடுப்போம்” எனக் கூறினார்.
அதுமட்டுமின்றி, ரஜினி காந்த் கூறிய கருத்தை அதிமுக இப்படி பெரிதுபடுத்துவதைத் தவிர்க்கலாம் என்றார்.
இதையும் படிங்க: