நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளித்த காங்கிரஸ் உறுப்பினர்களிடம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் இன்று நேர்காணல் நடைபெற்றது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளரின் பெயர் நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, 'கட்சியினர் விரும்புகிற ஏற்றுக்கொள்கிற மக்களின் ஆதரவைப்பெற்ற நல்ல தேசிய தோழரை வேட்பாளராக அறிவிப்போம். பாஜக, அதிமுக கூட்டணி ஒரு தோல்விகரமான கூட்டணி. அவர்களது ஆக்கப்பூர்வமான பணிகளை இளைஞர்களும் மக்களும் உற்று கவனித்து வருகின்றனர். இவற்றையெல்லாம் தகர்த்தெரிய பொதுமக்கள் எங்கள் கூட்டணிக்கு நிச்சயம் வாக்களிப்பார்கள்.
'தமிழ்நாட்டில் ஜனநாயகம் நிலவுகிறது என்று நாம் நம்புகிறோம். ஆனால் பொதுவெளி மற்றும் திரைப்படத் துறையில் இருக்கின்றவர்கள் பல்கலைக்கழக, கல்லூரி நிகழ்ச்சிகளில் தங்களுடைய கருத்துகளை பேசுவது வழக்கம். பெரியார் முதல் எம்.ஜி.ஆர் வரை அனைவரும் பல்கலைக்கழகங்களில் பேசியிருக்கின்றனர். பெரியார் தன்னுடைய கருத்துகளை பல்கலைக்கழகங்களில் வலிமையாக கூறியிருக்கிறார். அப்போது காமராஜர் ஆட்சியில் இருந்ததால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது, ஆளும் எடப்பாடி அரசு கருத்துரிமையை அழிக்க பார்க்கிறது. எனவேதான் பிகில் பட நிகழ்ச்சி நடத்தியதற்கு கல்லூரிக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். விஜய் மக்கள் விரும்பும் கலைஞர் அவர் பேசியதில் தவறேதும் இல்லை.
இதேபோன்றுதான் ஆறு மாதத்திற்கு முன்பு எங்கள் தலைவர் ராகுல் காந்தி ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பேசியதற்கு அந்த கல்லூரிக்கு நோட்டீஸ் கொடுத்தனர். இதென்ன சர்வாதிகார நாடா. ஒரு கருத்தை சொல்வதற்கு அவர்களுக்கு தகுதியும் அனுமதியும் இருக்கிறது. எனவே இந்த சர்வாதிகார போக்கை நடைமுறைப்படுத்தினால் அரசாங்க போக்கை மாற்றிவிடுவார்கள்' என எச்சரித்தார்.