சென்னை: கரோனா தொற்றின் காரணமாக சிபிஎஸ்இ மாணவர்களுக்கு நடந்த முதல்கட்ட எழுத்து தேர்வுகளில், பெரும்பாலான மாநிலங்களில் மிகப் பெருமளவிற்கு முறைகேடுகளில் பள்ளி நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் தேர்வு முடிவுகளை எப்படி தயாரிப்பது என்ற குழப்பத்தில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல்கட்ட தேர்வு மதிப்பெண்களை ரத்து செய்யலாமா? அல்லது 50 மதிப்பெண்களில், 10 மதிப்பெண்களை மட்டும் கணக்கில் எடுத்து கொள்ளலாமா? என, சிபிஎஸ்இ அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
கரோனா தொற்று காரணமாக 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை இரண்டு கட்டங்களாக சிபிஎஸ்இ நடத்தியது. முதல் கட்ட தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களிலும், இரண்டாம் கட்ட தேர்வுகள் மே மற்றும் ஜூன் மாதங்களிலும் நடந்தன.
ஒவ்வொரு பாடத்திலும் முதல்கட்ட தேர்வுக்கு 50 மதிப்பெண்களுக்கும், இரண்டாம் கட்ட தேர்வுகளில் 50 மதிப்பெண்களுக்கும் என, 100 மதிப்பெண்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டன. பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடும் போதே, காலையில் தேர்வுகள் நடந்து முடிந்ததும், அந்தந்த பள்ளி நிர்வாகங்களே விடைத்தாள்களை அங்கேயே மதிப்பீடு செய்து, மதிப்பெண்களை அதே நாளில், மத்திய இடைநிலை கல்வி வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இப்படி நடந்த முதல்கட்ட தேர்வுகளில், தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் உள்ளிட்ட சில நகரங்களிலும், இதேபோல் பிற மாநிலங்களில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளும், பெரிய அளவிற்கு முறைகேடுகளில் ஈடுபட்டது குறித்து அப்போதே மத்திய இடைநிலை கல்வி வாரிய அலுவலகத்திற்கு புகார்கள் சென்றன. கொள்குறி வகையில் (அப்ஜக்டிவ் டைப்) நடத்தப்பட்ட தேர்வுகளில், மாணவர்களுக்கு சரியான விடைகளை பள்ளி நிர்வாகங்களே அளித்ததும் தெரியவந்தது. இது குறித்து முழுமையாக விசாரணை நடத்திய மத்திய கல்வி அதிகாரிகள், முறைகேடுகள் நடந்ததை உறுதி செய்துள்ளனர்.
இதையடுத்து இரண்டாம் கட்ட தேர்வுக்கான விடைத்தாள்கள் மதிப்பீடுகள் என்பது அந்தந்த பள்ளிகளில் நடைபெறாமல், கரோனா காலகட்டத்திற்கு முந்தைய வழக்கப்படி, வெவ்வேறு மாநிலங்களுக்கு விடைத்தாள்கள் அனுப்பப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன. மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்வதில் உள்ள பிரச்சனையும் தேர்வு முடிவுகள் இழுபறிக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுபோன்ற பல்வேறு குழப்பங்களால், ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு பிறகே தேர்வு முடிவுகள் வெளியாகும் என சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது?