அனைத்து தனியார் பொறியியல் கல்லூரியின் முதல்வர்களுக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் குமார், மார்ச் 19ஆம் தேதி கடிதம் ஒன்றை அனுப்பினார்.
அதில், 'அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் பொறியியல் கல்லூரிகளில் தேர்வு முறைகேட்டில் ஈடுபட மாணவர்களுக்கு, கோஜன் ஸ்கூல் ஆப் பிசினஸ் அண்ட் டெக்னாலாஜி கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் - கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறையில் பணியாற்றிவரும் விரிவுரையாளர் சுரேஷ் (ஏ.ஐ.சி.டி.இ. கோடு 457035885) என்பவரும், இந்திரா காந்தி மகளிர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் - கம்யூனிகேஷன் துறையில் பணியாற்றிவரும் குமார் சார்லி பவுல் என்பவரும் உதவியதாக இருந்தனர்.
மேலும் இவர்கள் முனைவர் பட்டத்திற்கான சான்றிதழை போலியாக அளித்துள்ளனர். ஆகவே அவர்கள் இருவரையும் வேறு எந்தக் கல்லூரியிலும் கல்வி சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்த வேண்டாம்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதில், பேராசிரியர்களின் புகைப்படங்கள், அவர்களின் பான் எண்கள் உள்ளிட்ட அனைத்து தனிப்பட்ட விவரங்களும் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி இது விதிமீறல் என்றும், பேராசிரியர்களின் தனிப்பட்ட விவரங்களை வெளியிட்ட பதிவாளர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட பேராசிரியர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்கிட வேண்டும் எனவும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அகில இந்திய தனியார் பொறியியல் கல்லூரிகள் ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் கார்த்திக் புகார் கொடுத்துள்ளார்.