ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே வரதய்யபாளையத்தில் அமைந்துள்ள கல்கி ஆசிரமத்தின் நிறுவனர் விஜயகுமார். இவர், தன்னை கல்கியின் அவதாரம் என பிரகடனப்படுத்திக்கொண்டு, இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள், ஆன்மிகப் பயிற்சி வகுப்புகள் நடத்திவருகிறார்.
கல்கி விஜயகுமார், அவரது மகன் கிருஷ்ணாவினால் 'வெல்னஸ் குரூப்' என்ற பெயரில் ரியல் எஸ்டேட் எனப்படும் மனை வணிகம், கட்டுமான நிறுவனங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. இந்நிலையில், வரி ஏய்ப்பு புகாரில் வரதய்யபாளையம், ஹைதராபாத், பெங்களூரு, சென்னை என கல்கி ஆசிரமம் தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை அலவலர்கள் ஆறு நாள்களாக சோதனை நடத்தினர்.
நேற்று இரவுடன் முடிவடைந்த இந்தச் சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரொக்கம் 44 கோடி ரூபாய், 20 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள், 90 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கணக்கில் காட்டப்படாத நான்காயிரம் ஏக்கர் நிலம், துபாய், ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் செய்யப்பட்டுள்ள 100 கோடி ரூபாய் முதலீடுகள், ஹவாலா பரிமாற்றங்கள், பினாமி சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.
மேலும், 800 கோடி ரூபாய்க்கு அதிகமான வருமானம் கணக்கில் காட்டப்படாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கி ஆசிரமம் தொடர்புடைய முக்கிய நபர்களான கிருஷ்ணாவும், பிரீத்தாவும் சோதனைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை என்பதோடு, ஆவணங்களில் கையெழுத்திட மறுத்துவிட்டதாகவும் வருமானவரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் சோதனையால் பகவானை நம்பியுள்ள பக்தர்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க:கல்கி ஆசிரமத்தில் 2ஆவது நாளாக தொடரும் சோதனை!