சென்னை: மணிப்பூர் கலவரத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த 30ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய சீமான், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள் எனக் குறிப்பிட்டார்.
சீமானின் இந்த பேச்சுக்கு பேராசிரியர் அருணன், வசந்திதேவி, திரைப்பட நடிகை ரோஹிணி உள்படப் பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் குறித்து அவதூறாகப் பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திராவிட நட்புக் கழகம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (ஆக.02) புகார் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திராவிட நட்புக்கழகத் தலைவர் சிங்கராயர், "தமிழ்நாட்டில் அரசியல் சுயநல காரணங்களுக்காக சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கில் சீமான் பேச்சு அமைந்துள்ளது. அத்துடன், பொதுமக்களிடையே ஒரு வித அச்சத்தையும், கலவர பயத்தையும் உண்டாக்கியுள்ளது.
மேலும், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை சாத்தானின் பிள்ளைகள் என்றும் ஓட்டுக்கேட்டு வரும் வேட்பாளர்களின் முகத்தில் அமிலத்தை வீசுங்கள் என கலவரத்தை தூண்டுவது போல சீமான் பேசியுள்ளார். எனவே, தொடர்ச்சியாக இரு மதத்தினரை இழிவு படுத்தும் வகையில் பேசி வரும் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளோம். காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றமா?.. கார்கே தலைமையில் நடக்கவிருக்கும் ஆலோசனைக் கூட்டம்?