சென்னை: நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ, சில நாட்களுக்கு முன்பு தனது எக்ஸ் தளத்தில் உங்களை போல ’சேரி’ மொழியில் பேச முடியாது என ஒருவருக்கு பதிலளித்து உள்ளார். இதையடுத்து குஷ்பூவின் இந்த பதிவு சர்ச்சையாகிய நிலையில் பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
நடிகை குஷ்புவின் பதிவு சர்ச்சையாகிய நிலையில் மீண்டும் தான் பதிவிட்ட கருத்துக்கு விளக்கம் அளித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அதில் ’சேரி’ என்றால் பிரெஞ்சு மொழியில் ’அன்பு’ என்று பொருள் அதை கிண்டல் செய்யும் விதத்தில் பதிவிட்டு இருந்தேன் என கூறியிருந்தார். இந்த பதிவிற்கும் கடும் விமர்சனம் எழுந்தது.
மேலும் பல்வேறு தரப்பில் இருந்து குஷ்புவின் பதிவிற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பட்டியலின பிரிவு தலைவர் ரஞ்சன் கண்டனம் தெரிவித்தும், குஷ்பூ மன்னிப்பு கேட்கவில்கை என்றால் போராட்டாம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறை துறைமுகம் தொகுதி அமைப்பாளராக இருக்கும் கார்த்திக் என்பவர், குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், குஷ்பூ தனது எக்ஸ் பக்கத்தில் சேரி மொழி பேசத் தெரியாது என பதிவிட்டது என்னையும், நான் சார்ந்து இருக்கின்ற மக்களும், 2000 ஆண்டு காலமாக குடியிருந்து வரும் பகுதியில் மக்கள் பேசும் மொழியை வன்மம் கொண்ட மொழி, தீண்டத்தகாத மொழி என குஷ்பு இழிவுப்படுத்தி பேசியதால் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளோம்.
எனவே குஷ்பு மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனது உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்" என்றும் அதில் குறிப்பிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் நியமனத்தில் முறைகேடா? சுகாதாரத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!