கடலூர்: பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர் இளமாறன். இவர் தெலுங்கு மைனாரிட்டி கல்வி அறக்கட்டளை நடத்தி வருவதுடன் அதன் கீழ் பண்ருட்டியில் பல்வேறு கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நர்சிங் பயிற்சிக் கல்லூரி நடத்த அரசு அங்கீகாரம் பெற்றுத்தருவதாகக் கூறி பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது முன்னாள் உதவியாளர் பாவா சரவணன் ஆகியோர் மீது புகார் அளித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “கடந்த 2018-2019 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் நர்சிங் பயிற்சிக் கல்லூரி தொடங்கி, அதற்கு அரசு அங்கீகாரம் கேட்டு முறையாக விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தேன்.
ரூ.30 லட்சம் லஞ்சம்
அப்போது தேனாம்பேட்டையிலுள்ள டி.எம்.எஸ்ஸின் உதவி இயக்குநர் என்னை அழைத்து நர்சிங் பயிற்சிக்கு விண்ணப்பித்ததை சுகாதார ஆய்வாளர் பயிற்சிக்காக மாற்றி விண்ணப்பிக்கும்படி தெரிவித்தார். அதனடிப்படையில் சுகாதார ஆய்வாளர் பயிற்சிக்கென அரசு அங்கீகாரம் கேட்டு நான் முறையாக மாற்றி விண்ணப்பித்தேன்.
இது தொடர்பாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளராக இருந்த பாவா சரவணனை தொடர்பு கொண்ட போது அவர் கல்லூரிக்கான அரசு அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்றால், அந்தத் துறையின் மாணவர் சேர்க்கைக்கு ஏற்றார்போல் குறிப்பிட்ட தொகை தர வேண்டும் எனக்கூறி என்னிடம் 30 லட்சம் ரூபாய் பணம் கொடுக்குமாறு கூறினார்.
அதனைத் தொடர்ந்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதன் அடிப்படையில், சரவணன் கூறிய தேதியில் தலைமைச் செயலகத்திற்குச் சென்று அவர் கேட்ட தொகை 30 லட்ச ரூபாயும், தனிப்பட்ட முறையில் பாவா சரவணனுக்கு 70 ஆயிரம் ரூபாயும் கொடுத்தேன்.
அதுமட்டுமல்லாமல் பணம் கொடுத்த நாள் முதல் நான் பலமுறை முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரையும், முன்னாள் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரை சந்திக்க முயற்சி செய்தும் அனுமதி கிடைக்கவில்லை. எனது கல்லூரியின் அரசு அங்கீகாரம் குறித்து அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் உதவியாளரான சரவணனை அணுகி போது அங்கீகாரம் வழங்குவதற்கு பல்வேறு காரணங்களைக் கூறி தட்டிக் கழித்து, அலைக்கழித்தார்.
இறப்பில் சந்தேகம்
அதன் பின் கரோனா காலகட்டம் என்பதால் என்னால் யாரையும் சந்தித்து பேச முடியவில்லை. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, எனது பணத்திற்கு உத்தரவாதம் கேட்டு பேசியபோது பல்வேறு தொலைபேசி அழைப்புகள் மூலம் கொலை மிரட்டல் விடுத்தனர். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரின் உதவியாளர் பாவா சரவணன் சமீபத்தில் உயிரிழந்த விவகாரத்திலும் சந்தேகம் இருக்கிறது.
நான் ஏமாற்றப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர், தலைமைச் செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோருக்கு தனித்தனியாக புகார் அளித்தேன். எனது கல்லூரியில் நர்சிங் பயிற்சிக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத்தருவதாகக் கூறி 30 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடி செய்த முன்னாள் சுகாராதத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் நகைக்கடன் முறைகேடு தொடர்பான ஆய்வு; 95 விழுக்காடு நிறைவு என அமைச்சர் பெரியசாமி தகவல்