சென்னை: கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர், ராஜேந்திரன் (65). இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றபின், வடபழனி பழனி ஆண்டவர் கோயில் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு வாங்கியுள்ளார். இந்த வீட்டை கடந்த 2018ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளரான சிவ அரவிந்தன் என்பவருக்கு ராஜேந்திரன் வாடகைக்கு கொடுத்துள்ளார். 65 ஆயிரம் ரூபாய் முன்பணமாக பெற்று 13ஆயிரத்து 500 ரூபாய் மாத வாடகைக்கு கொடுத்துள்ளார், ராஜேந்திரன்.
இதையடுத்து 18 மாதங்கள் சரியாக வாடகை கொடுத்து வந்த சிவ அரவிந்தன், பின்னர் இரண்டு ஆண்டுகளாக வாடகை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். வாடகை குறித்து ராஜேந்திரன் கேட்டபோது வெளியூரில் உள்ள வீட்டை விற்றுவிட்டு வாடகை பணத்தை கொடுத்துவிடுவதாக காலம் தாழ்த்தி வந்துள்ளார். பின்னர் செல்போன் அழைப்பை எடுக்காமல் தவிர்த்து வந்துள்ளார்.
இதனால், சந்தேகமடைந்த ராஜேந்திரன் வாடகைக்கு விட்ட வீட்டை பார்க்கச் சென்றார். அப்போது அந்த வீட்டில் இந்திரா காந்தி என்பவர் 7 லட்சம் ரூபாய்க்கு வீட்டை லீஸுக்கு எடுத்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக ராஜேந்திரன், இந்திரா காந்தியை வீட்டை விட்டு காலி செய்ய கூறியதற்கு அவர் லீஸு பணம் 7லட்ச ரூபாயினை கொடுத்தால் வீட்டைக் காலி செய்வதாக கூறியுள்ளார்.
இதனால், ஏமாந்துபோன ராஜேந்திரன், தனது வீட்டில் வாடகைக்கு இருந்த பாஜக நிர்வாகி சிவ அரவிந்தன், மற்றொருவருக்கு ரூ.7 லட்சம் லீஸுக்கு கொடுத்து தன்னை ஏமாற்றியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஏற்கனவே இதேபோல வயதான மூதாட்டியான லீனா பெர்னாண்டஸ் என்பவரின் 2 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை அவர் வாடகைக்கு விட்டு மோசடி செய்த வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரபல ரவுடி ரெட் தினேஷ் கொலை - 5 பேர் கைது; பின்னணி என்ன?