சென்னை: தமிழ்நாடு பால்முகவர் சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்னுசாமி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ” ஏப்ரல் 13ஆம் தேதி நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘பீஸ்ட்’ படத்தின் கட் அவுட்டிற்கு விஜய் ரசிகர்கள் சிலர் பால் அபிஷேகம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது, திரையரங்குகளில் வைக்கப்பட்டுள்ள நடிகர்களின் பல அடி உயர கட் அவுட்டுகளின் மீது ஏறி மாலை அணிவித்து, உயிரை பணயம் வைத்து பாலாபிஷேகம் செய்து வருகின்றனர்.
அவ்வாறு பாலாபிஷேகம் செய்யும்போது கட் அவுட் சரிந்து பல ரசிகர்கள் உயிரிழப்பதும், படுகாயம் அடைவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படுகாயம் அடைந்த ரசிகர்களுக்கு எந்த ஒரு முன்னணி நடிகர்களும் வருத்தமும், பாதிக்கப்பட்ட ரசிகர்களின் குடும்பத்தினருக்கு உதவி செய்ய முன்வருவதும் இல்லை.
இதேபோல தற்போது ‘பீஸ்ட்’ பட கட் அவுட் மீது ஏறி மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள் மீதும், ரசிகர்களின் இந்த அஜாக்கிரதையான செயலை கண்டிக்காத, நல்வழிப்படுத்த தவறிய நடிகர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர்களின் கட் அவுட்டுகளின் மேலேறி மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்ய நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும்” என புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கிடைக்குமா ஜாமீன்.. ஏக்கத்தில் நடிகை மீரா மிதுன்!