சென்னை: பழைய வண்ணாரபேட்டையில் தியா சுபபிரியா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ரிதமீனா. இவர் வெளிநாட்டில் மருத்துவம் படிக்க விரும்பி உள்ளார். இதனால் இது தொடர்பாக வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை, தங்களுக்குத் தெரிந்தவர்கள் மற்றும் ஆன்லைன் மூலம் தேடி வந்துள்ளனர்.
அப்போது வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு இருப்பதாக, பிரிட்ஜ் மெடிக்கல் எஜிகேஷனைச் சேர்ந்த பிரவீன் மற்றும் வென்பார் அகாடமியைச் சேர்ந்த சதீஷ் ஜனார்தனன் ஆகிய இருவர் மூலமாக சந்தானராஜ் மற்றும் கோகுல் ஆகிய இருவர் ரிதமீனாவுக்கு அறிமுகமாகி உள்ளனர்.
இவர்கள் அமெரிக்காவை தலையிடமாகக் கொண்ட கர்பியன் தீவில் செயிண்ட் தெரசா பல்கலைக்கழகத்தில் படிக்கலாம் எனவும் ரிதமீனாவின் குடும்பத்தினரிடம் கூறி உள்ளனர். அதேநேரம், மருத்துவப் படிப்பு கட்டணமாக சுமார் 25 ஆயிரம் டாலரை (இந்திய மதிப்பில் 18 லட்சம் ரூபாய்) பெற்றுள்ளனர்.
இதனையடுத்து, கடந்த ஆண்டு மருத்துவ சீட்டை உறுதிபடுத்திய இருவரும், மாணவியை அந்த பல்கலைக்கழகத்தில் சேர்க்கை செய்துள்ளனர். அதில், முதலாமாண்டு படிப்பை கரோனாவை காரணம் காட்டி இங்கு இருந்தே படிக்க வைத்துள்ளனர். தொடர்ந்து, 2ஆம் ஆண்டு அங்கு சென்று பார்த்தபோது, அவர்கள் கூறிய அந்த குறிப்பிட்ட இடத்தில், அந்த பெயரில் ஒரு பல்கலைக்கழகமே இல்லை என்ற அதிர்ச்சி கிடைத்துள்ளது.
மேலும், அந்த இடத்தில் சிறிய அளவிலான கட்டடம் ஒன்றில் பல்கலைக்கழகம் செயல்படுவது போன்று போலியாக ஏற்பாடு செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. எனவே, இது குறித்து அந்த நாட்டில் மாணவி ரிதமீனா தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, தமிழ்நாட்டில் உள்ள சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இவர்கள் போல் யாரும் போலியான இந்த பல்கலைக்கழகத்தை நம்பி ஏமாறக் கூடாது என்பதால், பாதிக்கப்பட்ட மாணவி ரிதமீனாவின் தாய் தியா சுபபிரியா, தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தியா சுபபிரியா, “பிரவின் என்பவர் மூலம் காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவமனையில் பணிபுரியும் கோகுல் என்பவரையும், பல்கலைக்கழகத்தின் சேர்மன் சந்தானராஜ் குமார் என்பவரையும் அறிமுகம் செய்து, இல்லாத பல்கலைக்கழகத்தின் பெயரைச் சொல்லி பணத்தை பெற்று மோசடி செய்து வருகின்றனர்.
ஏமாற்றி வாங்கிய பணத்தை திரும்பக் கேட்டால், இந்த ஆண்டு சேரும் மாணவர்களிடம் பணத்தைப் பெற்று, அதில் உங்கள் பணத்தை திருப்பி தருவதாக கூறுகிறார்கள்” என தெரிவித்தார். மேலும், இந்த பல்கலைக்கழகத்தின் இந்திய சேர்க்கை அலுவலகம் கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மிளகாய்பொடி தூவி ரூ.1.5 கோடி அபேஸ்.. நெல்லையில் நடந்த சினிமா பாணி கொள்ளை