சென்னை: ஆலந்தூர் பகுதியை சேர்ந்தவர் லவக்குமார். இவர் லஞ்ச ஒழிப்புத்துறையில் டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு (அக்.12) லவக்குமார் வில்லிவாக்கம் எம்.டி.எச் சாலையில் உள்ள நவீன் எண்டர்பிரைஸ் பாரத் பெட்ரோல் பங்கில் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட சென்றார்.
அப்போது அங்கிருந்த பெட்ரோல் பங்க் ஊழியரிடம் 250 ரூபாய் பணம் கொடுத்து பெட்ரோல் போடுமாறு கேட்டு கொண்டார். பின்னர் ஊழியர் மிஷினில் 250 ரூபாய் செட்டிங் செய்து அவரது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்பினார். பெட்ரோல் போடும் இயந்திரத்தில் 2.47 லிட்டர் என அளவு காண்பித்தது.
ஆனால் இருசக்கர வாகனத்தில் குறிப்பிட்ட அளவைவிட குறைவாக இருந்ததால் சந்தேகமடைந்த லவக்குமார் வாகனத்தில் இருந்த பெட்ரோலை ஒரு கேனில் எடுத்து அளவு பார்த்த போது 1.8 லிட்டர் மட்டுமே இருந்தது.
உடனே லவக்குமார் 800 மில்லி லிட்டர் பெட்ரோல் குறைந்தது குறித்து பங்க் ஊழியரிடம் கேட்ட போது, அவர் லவக்குமாரை சமாதானம் செய்து மீதி பெட்ரோலை வாகனத்தில் நிரப்பினார்.
இதனைத்தொடர்ந்து லவக்குமார் பெட்ரோல் மோசடி செய்த பெட்ரோல் பங்க் மீது நடவடிக்கை எடுக்ககோரி வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க் மீது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், குற்றச்சாட்டப்பட்ட பெட்ரோல் பங்கின் மேலாளர் மோகன்ராஜ், லவக்குமார் கூறும் மோசடி போன்ற என்ற செயலும் நடைபெறவில்லை. தவறான புரிதல் காரணமாகவே இது போன்ற ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றார்.
இதையும் படிங்க: உறங்க வந்த இளைஞர் மீது விளையாட்டாக தீ வைத்தவர்கள் கைது!