தமிழ்நாடு, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 60 தொகுதிகளில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சிக்கு பொது சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "கடந்த 2010ஆம் ஆண்டு நிறுவனத் தலைவர் பாரிவேந்தரால் தொடங்கப்பட்ட இந்திய ஜனநாயக கட்சி, அதே ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது. ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்வது, இயற்கை சீற்றங்களின் போது அவர்களுக்கு ஆதரவளிப்பது போன்ற பணிகளை செய்வதுடன், தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல்களிலும் களம்கண்டு வருகிறது.
கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் "மோதிரம்", 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் "கத்தரிக்கோல்" ஆகியவை பொது சின்னமாக ஒதுக்கப்பட்டதால், சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களில் கட்சியின் வேட்பாளர்களை வாக்காளர்கள் எளிதில் அடையாளம் கண்டு வாக்களிக்க எளிதாக இருந்தது. அதன் மூலம் கணிசமான வாக்குகளும் பெற்றோம்.
வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில், தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 20 தொகுதிகளிலும் ஐ.ஜே.கே. போட்டியிடுகிறது. அதனால் கடந்த தேர்தல்களை போல இந்த முறையும் பொது சின்னமாக ஒதுக்க வேண்டுமென இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளோம்.
கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி அளித்த மனுவில், ஏழு கதிர்கள் கொண்ட பேனா முள் சின்னத்தை தங்களுக்கான பொது சின்னமாக ஒதுக்க கோரி மனு கொடுத்த நிலையில், அதை கருத்தில் கொள்ளாமல் வேறொரு கட்சிக்கு ஒதுக்கியிருப்பது தெரியவந்துள்ளது.மேலும் வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்க உள்ளதால் அதற்குள் சின்னம் ஒதுக்கவேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென கட்சியை சேர்ந்த வழக்கறிஞரான டாக்டர் வி.வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் முறையீடு செய்தார். அவரது முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று மதியம் ஐ.ஜே.ஜே. வழக்கை விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத அமைச்சர் நிலோபர் கபில் : தொண்டர்கள் கொந்தளிப்பு!