சென்னை: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களில் நேற்று (ஆகஸ்ட் 13) சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இந்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு இடி உடன் கன மழை பெய்தது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளாகன அம்பத்தூர், திருவேற்காடு, ஆவடி, தாம்பரம், உள்ளிட்ட பகுதிகளில், நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.
இந்த கனமழை காரணமாக சென்னை மாநகரின் பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. மேலும், சில சுரங்கப்பாதை, மேம்பாலம் கீழ் இருக்கும் இணைப்பு சாலைகளில் என ஆங்காங்கே மழை நீர் தேங்கியது. சாலைகளில் மழை நீர் தேங்கியதால், சென்னையில் பல்வேறு பகுதிகளில் வாகன ஓட்டிகள் சீரமத்திற்கு உள்ளாகினர். மேலும் சென்னையின் முக்கிய பகுதியான கிண்டி - கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் இன்று காலை மோட்டார் கொண்டு அகற்றப்பட்டது.
சென்னையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி சென்னை அம்பத்தூரில் அதிகபட்சமாக 11 செ.மீ மழை பதிவானது. பூந்தமல்லி, முகலிவாக்கம், வளசரவாக்கம், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் 10 செ.மீ, ஆலந்தூரில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தற்போது தொடர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சியின் தூரித நடவடிக்கைகள்: நேற்று இரவு பெய்த கன மழையால் கத்திப்பாரா மேம்பாலத்தில், கீழ் சுரங்கப் பாதையில் தேங்கி நின்ற மழைநீரை மின் மோட்டாரை கொண்டு அகற்றப்பட்டது. இந்த பணியினை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் இணைந்து மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, அயனாவரம் பிரதான சாலை, மாதாவரம் டேங்க் சாலையில், நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணியினை ஆய்வு செய்தார். இதில் தேங்கிய மழை நீரை உடனடியாக அகற்றக்கோரி மண்டல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேயர் ஆய்வு: சென்னை, பெரம்பூர் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீர் அகற்றப்படுவதை பெருநகர சென்னை மாநகராட்சி மேயர். ஆர்.பிரியா நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மின்சார துண்டிப்பு: நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை பெய்த கனமழை காரணமாக, சென்னையில் பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மழை சற்று குறைந்த பின், மின்சார விநியோகம், வழங்கப்பட்டது. ஆனாலும் நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரம் மற்றும் கோடம்பாக்கத்தில் இடி மின்னல் தாக்கம் அதிகமாக இருந்தால், சில இடங்களில் டிரான்ஸ்பார்மர்கள் பழுது அடைந்து விட்டது என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.