சென்னை: தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களின் விற்பனையை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் குட்கா விற்பனையை முற்றிலுமாக தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.
சென்னை காவல்துறை, சென்னை மாநகராட்சி, உணவு பாதுகாப்பு துறை மற்றும் வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில் குட்கா விற்பனையை தடுப்பது குறித்து அலுவலர்களுடன் வணிகர் சங்க பிரதிநிதிகள் கலந்து ஆலோசித்தனர்.
சங்கர் ஜிவால்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், "குட்கா, மாவா பயன்பாட்டை முற்றிலும் அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. படிப்படியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. பிற மாநிலங்களில் குட்கா பொருள்கள் தடை செய்யப்படவில்லை. எனவே, காய்கறி உணவு பொருள்களுடன் மறைத்து அவை தமிழ்நாட்டிற்கு எடுத்துவரப்படுகின்றன.
அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையைப் பொறுத்தவரை குட்கா கடத்தலில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள். குட்கா மொத்த விற்பனை, பதுக்கல் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுவருகின்றனர். எனினும், இனி குட்கா, மாவா விற்பனை பதுக்கலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
ககன்தீப் சிங் பேடி
தொடர்ந்து பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, "சென்னை மாநகராட்சியில் உரிமம் பெற்ற 70,000 வணிகர்கள் உள்ளனர். அதில், 23ஆயிரம் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ய வாய்ப்புள்ளதால், வணிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளதுடன் பொதுமக்களுக்கு இதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி தெரிவித்துள்ளோம்.
மளிகைக் கடை, தேநீர் கடை உள்ளிட்ட சில்லறை விற்பனைக் கடைகளில் குட்கா பொருள் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்தால் கடையின் உரிமத்தை ரத்து செய்வதோடு கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுப்போம்" என்றார்.
இதையும் படிங்க: இல்லம் தேடி வந்த சாதிச் சான்றிதழ் - மாவட்ட ஆட்சியரை வாழ்த்திய இருளர் இன மக்கள்!