சென்னைப் பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஊரடங்கு அமலாக்கப் பணிகளில், காவல் துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வாகனத் தணிக்கை பணிகளையும் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியதாவது, 'ஊரடங்கைப் பொறுத்தவரை நேற்று(ஜூன்.7) முதல் ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் முதல் நாளே போக்குவரத்து அதிகமாகி விட்டது. அதனை குறைக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம். சாலைகளில் தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
![Commissioner](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-06-copfunction-script-7202290_07062021191248_0706f_1623073368_699.jpg)
ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பலரும் இ-பதிவு பெற்று அத்தியாவசியப் பணிகளுக்காக சென்று வருகின்றனர். ஆகையால், போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. எனவே, இன்று (ஜூன்.8) முதல் அனைத்து சிக்னல்களும் நடைமுறைப்படுத்தப்படும்.
ஆம்புலன்ஸ் போன்ற முக்கிய வாகனங்களுக்கு எந்த விதமான சோதனைகளுமின்றி அனுப்பப்படுகிறது. சேத்துப்பட்டு, மண்ணடியில் ஊரடங்குப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் பிரச்னையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிலும் ஆட்டோ ஓட்டுநர் மீது பெண் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். காவல் துறையினரிடம் வாகன ஓட்டிகள் தகராறு செய்யும் சம்பவங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.