சென்னை: ராயப்பேட்டையில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலில் நேற்று(செப்.16) மாலை திடீரென இருதரப்பு கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனைக் கண்ட வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட, மாணவர்கள் அருகே உள்ள கடையிலிருந்த பொருட்களை எடுத்து வீசி ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.
இதுகுறித்து வாடிக்கையாளர்கள் அளித்த தகவலின் பேரில் அண்ணாசாலை காவல்துறையினர் இதுதொடர்பாக மூன்று பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிடிப்பட்ட மாணவர்கள் நந்தனம் அரசு கல்லூரியை சேர்ந்த ராகுல், ஹரிஷ், திவாகர் என்பது தெரியவந்தது.
மேலும், நந்தனம் கல்லூரி மாணவர்கள் ராயப்பேட்டையில் அமைந்துள்ள பிரபல மாலிற்கு சுற்றி பார்க்க வந்ததும், அப்போது அங்கு இருந்த ராயப்பேட்டையை சேர்ந்த புதுக்கல்லூரி மாணவர்கள் "எங்க ஏரியா உள்ளே எதற்கு நீங்க வரீங்க" என்று நந்தனம் கல்லூரி மாணவர்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் அப்போது வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி ஒருவரைக்கொருவர் தாக்கிக்கொண்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் பிடிப்பட்ட மூன்று மாணவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், சிறுகாயம் ஏற்படுத்துதல், ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், ஆபாசமாக பேசுதல், மிரட்டல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கி எச்சரித்து காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.