சென்னை வேப்பேரி பெருமாள் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நிர்மல் குமார் (19). இவர் கடந்த 11ஆம் தேதி இரவு தனது வீட்டின் முன்பாக ரூ.2 லட்சம் மதிப்பிலான தனது மோட்டர் சைக்கிளை நிறுத்திச் சென்றுள்ளார். இந்நிலையில் காலை எழுந்து வெளியே வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.இது குறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நிர்மல் குமாரின் மோட்டார் சைக்கிளை திருடிய நபர்கள் எம்.கே.பி நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் (20), அஜித் குமார் 18) ஆகியோரை கைது செய்தனர். இவர்களில் சந்தோஷ்குமார் ஒரகடத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
விசாரணையின் போது, மேற்கூறிய நபர்கள் பல்வேறு தொடர் பைக் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும், இதுவரை 10க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் திருடியது தெரியவந்தது. மேலும் இவர்கள் திருடிய மோட்டார் சைக்கிளை மெக்கானிக் ஒருவரிடம் கொடுத்து, அதை பல்வேறு பாகங்களாக பிரித்து விற்பனை செய்து வந்ததும் அம்பலமாகியுள்ளது.
இதைத் தொடார்ந்து காவல் துறையினர் வழக்கில் தொடர்புடைய, கணினி பயிற்சி மையத்தில் டிசைனராக பணியாற்றி வரும் ஜான் சாமுவேலை(21) கைது செய்தனர். மேலும் திருட்டு மோட்டார் சைக்கிளை பல்வேறு பாகங்களாக பிரித்து விற்பனை செய்து வந்த மெக்கானிக்களான பிருத்விராஜ் (21), பாலாஜி (20) ஆகியோரையும் கைது செய்தனர்.