கல்லூரிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரண்டாயிரத்து 331 உதவி விரிவுரையாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இந்தப் பணியிடத்திற்கு அக்டோபர் 4 ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் தேதி, இடம் பின்னர் தெரிவிக்கப்படவுள்ளது.
இந்தப் பணிக்கு முக்கியமாக அவர்களின் சான்றிதழ்களுடன் அனுபவத்திற்கு 15 மதிப்பெண்கள் அளிக்கப்படவுள்ளது. இதற்கான அனுபவச் சான்றிதழ் பெறுவதில் பல்வேறு நிபந்தனைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் பணி அனுபவச் சான்றிதழ் போலியாக யாரும் தாக்கல் செய்யக் கூடாது என்பதில் உறுதியாகவும் உள்ளது. மேலும் இந்தப் பணியிடத்திற்கு வரும் 30ம் தேதிவரை மட்டுமே விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கல்வி இயக்குநர் ஜோதி வெங்கடேஸ்வரன், அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்கள், அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்:
அரசுக் கல்லூரிகளில் காலியாகவுள்ள இரண்டாயிரத்து 331 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்குத் தகுதியான நபர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் காலிப்பணியிடங்களுக்கு அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகளின்படி பணி அனுபவச் சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும். பணி நாடுவோர் பணி அனுபவச் சான்று பெறுவதற்காக அவர்கள் பணிபுரிந்த அல்லது பணிபுரியும் தனியார் பல்கலைக்கழகங்கள், தனியார் கல்லூரிகளை அணுகும்போது பல்வேறு பிரச்னைகளை சந்திப்பதாகப் புகார்கள் பெறப்படுகின்றன.
பணி அனுபவச் சான்றிதழ் தர மறுப்பது, உரிய படிவத்தில் சான்றிதழ் தர மறுப்பது, வருகைப்பதிவேடு நகல் மற்றும் ஊதிய வழக்கு பதிவேடு தர மறுப்பது, தனியார் பல்கலைக்கழகம், தனியார் கல்லூரிகளில் பணி அனுபவச் சான்றுக்கு குறிப்பிட்ட தொகை கேட்பது, பணி அனுபவச் சான்று கோரினால் தற்போதுள்ள பணியிலிருந்து விலகல் கடிதம் கொடுக்க வேண்டும் என தெரிவிப்பது, பணி அனுபவச் சான்றிதழ் வழங்குவதில் காரணமின்றி தாமதப்படுத்தல் இதுபோன்ற நடவடிக்கைகளில் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரிகள் ஈடுபட்டால் அது வகுத்துள்ள நெறிமுறைகளுக்கு எதிரானதாகும். அதுமட்டுமின்றி அரசு வகுத்துள்ள ஒழுங்காற்று சட்ட விதிமுறைகளை மீறிய செயலாகும்.
எனவே பணிக்கு விண்ணப்பிப்போரின் நகல் பணி அனுபவச் சான்றிதழ் கோரி, தனியார் பல்கலைக்கழகம், கல்லூரிகளை அணுகும்போது அந்தப் பல்கலைக்கழகம், கல்லூரிகள் பணி நாடுவோரின் நிலையைக் கருத்தில் கொண்டு எந்தவித புகாருக்கும் இடம் தராமல் விரைந்து பணி அனுபவச் சான்றிதழ் வழங்கிட அறிவுறுத்தப்படுகிறது. இதையும் மீறி தங்களது தவறான நிலைப்பாட்டை தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மாற்றிக் கொள்ளவில்லை எனில் பல்கலைக்கழகம், கல்லூரி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க : பள்ளிக்கல்வித் துறையின் அறிவிப்பை கேட்டு ஆசிரியர் மரணம்