சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவராக தன்னை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எண்ணிய ஓபிஎஸ்க்கு, சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் இபிஎஸ்-இன் செல்வாக்கு உயர்கிறது. என்னதான் நடக்கிறது அதிமுகவில், சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியதாக, அடுத்தடுத்து 17 மாவட்ட நிர்வாகிகளை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி அதிமுக அதிரடி காட்டுகிறது.
சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவரான ஓபிஎஸ்
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம், சட்டப்பேரவை கொறடா மற்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் மதியம் 12.30 மணிக்கு தொடங்கி மாலை நான்கு மணி வரை நடைபெற்றது. இதில் சுமார் 60-க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், சசிகலாவுக்கு எதிராக அனேக குரல்கள் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கடந்த வாரத்தில் ஓபிஎஸ் தனக்கு எந்த பதவியும் வேண்டாம் என்று கழக நிர்வாகயிடம் தெரிவித்தார் என்று தகவல் வெளியானது. எனினும் கூட்ட முடிவில் வெளியான அறிக்கையில்
துணைத் தலைவர் - ஓ. பன்னீர்செல்வம்,
கொறடா - S.P. வேலுமணி, ( கொங்கு மண்டலம் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்)
துணை கொறடா - சு . ரவி ( எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்)
பொருளாளர் - கடம்பூர் C. ராஜூ, ( ஓபிஎஸ் ஆதரவாளர்)
செயலாளர் - K.P. அன்பழகன், ( கொங்கு மண்டலம் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்)
துணைச் செயலாளர் - P.H. மனோஜ் பாண்டியன், ( தெற்கு மண்டலம் ஓபிஎஸ் ஆதரவாளர்) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக தீர்மானம்
*சசிகலா கழகத்தை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப்போவதாக ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதும், அதை ஊர் அறிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதுமாக வினோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.
*சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியவர்களை கட்சியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருப்பினும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
*சசிகலாவுடன் தொலைபேசி வாயிலாக பேசிய, 16 அதிமுக மாவட்ட நிர்வாகிகள், அன்புமணி ராமதாஸ், பாமகவை விமர்சித்துப் பேசிய அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி ஆகியோரை அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கம் செய்து கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.
கட்சியிலிருந்து நீக்கப்படுவது தெரியாமல் அதிமுக அலுவலகம் வருகைதந்த புகழேந்தி
கடந்த 13ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த புகழேந்தி, ''பா.ம.கவால் எங்களுக்கு எந்தவிதப் பயனும் இல்லை. அ.தி.மு.க வெற்றி பெற்ற தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எந்த வேலையும் இல்லை. ஓ.பன்னீர்செல்வம் கையொப்பம் போட்டதால்தான் இன்று அன்புமணி ராஜ்யசபா எம்.பியாக இருக்கிறார்.
அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்ததால்தான் தேர்தலில் தோல்வியை தழுவிவிட்டதாக சொல்வதை ஏற்க முடியாது. பா.ம.கவின் கோட்டை எனக் கூறப்பட்ட தொகுதிகளில் எல்லாம் அ.தி.மு.க தோற்றுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மற்றவர்களை விமர்சனம் செய்வது பா.ம.கவின் வாடிக்கை" என்றார். இதன் காரணமாகதான் தன்னை கட்சியில் இருந்து தூக்கப் போகிறார்கள் என்று கூட தெரியாமல், அதிமுக அலுவலகம் வருகைதந்த வா. புகழேந்தி, சிறிது நேரத்தில் அதிமுக அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்.
எடப்பாடி பழனிசாமியின் சூழ்ச்சி வலை
தமிழ்நாட்டில் முதலமைச்சர் வேட்பாளர்கள் தேர்வில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் என இருவருமே இணைந்துதான் கையொப்பமிட்டனர். ஆனால் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்படுவதற்கு ஓ.பி.எஸ் ஒப்புக்கொண்டார். ஆனால் எதிர்கட்சித் தலைவர் பதவியை பன்னீர்செல்வத்துக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. இதற்கு கொங்கு மண்டல நிர்வாகிகள் சம்மதம் தெரிவிக்கவில்லை. அதற்கேற்றார்போல் நடைபெற்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அதிக பேர் வெற்றி பெற்றனர்.
இதன் காரணமாக ஓபிஎஸ்ஸின் அதிகாரம் அதிமுகவில் சரியத் தொடங்கியது. மேலும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தன்னை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் நினைத்திருக்க, தேர்தல் செலவீனங்கள், மாநிலம் முழுக்க வலம் வந்து பரப்புரை மேற்கொண்டது எடப்பாடிதான், அவருக்கே எதிர்கட்சித் தலைவர் பதவி தரவேண்டுமென்று கருத்தை வலியுறுத்தினர்.
இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், 51 எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு எதிர்கட்சித் தலைவராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டதாக அறிக்கை வெளியானது. இந்நிலையில் உச்சபட்ச விரக்தியில் ஓபிஎஸ் தனியாக அறிக்கை விட தொடங்கினார். மேலும், கரோனா உள்பட பல்வேறு விவகாரங்களில் இ.பி.எஸ்ஸும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவது, முதலமைச்சருக்கு கடிதம் எழுதுவது என இருந்தார்.
சசிகலாவுக்கு ஓபிஎஸ் ஓகே சிக்னலா?
இந்நிலையில் அதருக்கு முட்டுக்கட்டை போடும்விதமாக, ‘ஆயிரம் சசிகலா வந்தாலும் அ.தி.மு.கவை அசைக்க முடியாது' என எடப்பாடியின் ஆதரவாளரான சி.வி.சண்முகம் தெரிவித்திருந்தார். சசிகலாவுக்கு ஆதரவு, எதிர்ப்பு என இரு பிரிவாக அ.தி.மு.க பிரிந்துள்ளதை கண்டு தொண்டர்கள் கவலையோடு இருக்கின்றனர். ஓபிஎஸ் மற்றும் இபிஎஸக்கு இடையே உள்ள பனிப்போர் எப்போது முடிவுக்கு வரும்? என்ற கேள்வி அக்கட்சியின் நிர்வாகிகளிடையே எழுந்துள்ளது.