உள்ளூர் மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், ஏரி, அதைச் சார்ந்து வாழும் பறவைகள், உயிரினங்கள் போன்ற பல்லுயிர் சூழலைப் பாதுகாக்கும் வகையிலும் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட செம்பாக்கம் ஏரியை தூய்மைப்படுத்த தொழில் நிறுவனங்களும், தன்னார்வ தொண்டு அமைப்புகளும் ஒன்றிணைந்துள்ளன.
இந்தத் திட்டத்தின்படி ”ஏரியில் உள்ள குப்பைகள், கழிவுகள் அகற்றப்பட்டு, ஏரி தூர்வாரப்பட்டு, தீங்கு செய்யும் செடிகள் அகற்றப்படும். ஏரியைச் சுற்றிலும் அப்பகுதி மக்கள் அழகாக வந்து செல்லும் படியாக நடைபாதைகள் அமைக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ”இந்தத் திட்டத்தின் மூலம் ஏரியின் கொள்ளளவு 50 சதவிகிதம் அதிகரிக்கும். இதனால் நிலத்தடி நீர் அதிகரித்து அப்பகுதியின் நீரின் தரம் உயரும். இதன் மூலம், அப்பகுதியைச் சேர்ந்த 10 ஆயிரம் மக்கள் பயன்பெறுவர். செம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் செல்லும் நீர்வழிப் பாதைகளும் சீரமைக்கப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்பாக்கம் ஏரியிலிருந்து செல்லும் தண்ணீர், தென்னிந்தியாவில் எஞ்சியுள்ள ஒரு சில இயற்கை சதுப்பு நிலப் பகுதிகளில் ஒன்றான பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதிக்கு செல்கிறது. இதன்மூலம் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி மேம்பட்டு, பல்லுயிர்ச் சூழல் சீராகும் எனவும் கூறப்படுகிறது.
இந்தத் திட்டத்திற்காக தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசன்ட், மோட்டார் பம்ப், நீர்நிலை மேலாண்மை நிறுவனமான கிரண்ட்ஃபோஸ் (Grundfos), உலகின் மிகப்பெரிய இயற்கை பாதுகாப்பு தொண்டு அமைப்புகளில் ஒன்றான ’தி நேச்சர் கன்சர்வன்ஸி’, சென்னையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான கேர் டிரஸ்ட், சென்னை ஐஐடி பல்கலைக்கழகம் ஆகியவை ஒன்றிணைந்துள்ளன.
மேலும், இதற்காக காக்னிசன்ட் 2.7 கோடி ரூபாயும், கிரன்ட்ஃபோஸ் (Grundfos) 1.7 கோடி ரூபாயும் வழங்கியுள்ளன. கரோனா நோய் தொற்று நிலைமை சற்று கட்டுக்குள் வந்ததும் காக்னிசன்ட் நிறுவன ஊழியர்களும் கிரன்ஃபோஸ் நிறுவன ஊழியர்களும் ஒன்றிணைந்து அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி, மக்களே ஏரியை நீண்டகாலத்துக்கு பராமரிக்கும் வகையில் பயிற்சியும் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ராகுல் விளக்கத்தைத் தொடர்ந்து, தனது கருத்தை திரும்பப் பெற்றார் கபில் சிபல்!