தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது தருமபுரி தொகுதி வடக்கு போதனஅள்ளி ஊராட்சி சிவலகாரன் கொட்டாய் நியாயவிலைக் கடையைப் பிரிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி சட்டமன்ற உறுப்பினர் சுப்ரமணியின் கேள்விக்கு பதிலளித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, இந்த பகுதி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டியது அரசின் பணியாகும். அப்பகுதி மக்களுக்கு தேவையான வசதிகளை செய்யும் வகையில் விரைவில் துறை ரீதியாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பகுதி நேர நியாயவிலைக் கடைகள், நகரும் கடைகளின் தூரத்தை 3 கிமீஆக உயர்த்துவதற்கு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்படும். ரேஷன் கடைகளில் பொருள்கள் வழங்கப்படுவதில்லை என பொத்தாம்பொதுவாக தவறான தகவலை கூறக்கூடாது. எந்தெந்த ரேஷன் கடைகளில் பொருள்கள் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுக் கூறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் தேவைக்கு கூடுதலாக 5 சதவீத பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. பொருள்கள் பாயின்ட் ஆஃப் சேல் மிஷின் மூலம் ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தி வழங்கப்படுவதால் தவறு செய்தால் அது குறித்து புகார் அளிக்கலாம் என்றார்.