சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மாநில அரசின் சார்பில் சென்னை, எழும்பூர், அருங்காட்சியக வளாகம், தேசிய கலைக்கூடம் எதிரில் காந்தியடிகளின் திருவுருவச்சிலையினை நாளை (ஆகஸ்ட் 15) காலை 10.30 மணியளவில் திறந்து வைக்க உள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”காந்தியடிகள் தமிழ்நாட்டில் மேலாடை துறந்து எளியவர்களைப் போல அரை ஆடை உடுத்திய நூற்றாண்டு நினைவாகவும், 75ஆவது சுதந்திரத் திருநாள் – அமுதப் பெருவிழாவினை சிறப்பிக்கின்ற வகையிலும் உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச் சிலையானது முதலமைச்சரால் திறக்கப்படவுள்ளது.
ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளை எதிர்த்துப் பல்வேறு போராட்டங்களும், கலவரங்களும் நிகழ்வதைக் கண்டு வேதனை அடைந்த காந்தியடிகள், நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் அயராது முயற்சியில் தன்னையே அர்ப்பணித்து வந்தார்.
காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமை இயக்கம், உப்புச் சத்தியாகிரகம், சட்ட மறுப்பு இயக்கம் மற்றும் வெள்ளையனே வெளியேறு ஆகிய முக்கியமான போராட்டங்கள், இந்திய நாட்டின் விடுதலைக்கு வித்திட்டது. சுதேசி இயக்கம், தீண்டாமை, மது விலக்கு இவற்றையே தனது லட்சியமாக கொண்டிருந்தார், அண்ணல் காந்தியடிகள்.
தமிழ் மீது பற்று கொண்ட காந்தியடிகள்: மேலும், சத்தியம், அகிம்சை இவை இரண்டையும் தன் இரு கண்கள் போல போற்றி, தம் வாழ்நாள் இறுதி வரை கடைபிடித்து வந்தார். குஜராத்தில் பிறந்து, இந்திய மொழிகள் பல கற்றறிந்தாலும், தமிழ் மொழி மீதும் தமிழ் மக்கள் மீதும் அண்ணல் காந்தியடிகள் அளவற்ற அன்பும், நேசமும் கொண்டிருந்தார்.
அகிம்சை வழியில் வெள்ளையர்களை வெளியேற்ற, புதிய பாதை காட்டிய அண்ணல் காந்தியடிகள் 1896 முதல் 1946ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டிற்கு 12 முறை வருகைபுரிந்துள்ளார். மதுரை மாநகருக்கு 1921 செப்டம்பர் 22ஆம் ஆண்டு வருகை புரிந்தபோது மக்கள் உடுக்க போதிய உடை இன்றி துன்பமடைவதைக்கண்டு வேதனை அடைந்தார்.
தன்னுடைய வழக்கமான உடையைத் துறந்து, விவசாயிகள் அணியும் வேட்டி, துண்டுக்கு தன்னை மாற்றிக் கொண்டதோடு, மேலாடை அணிவதை தன் வாழ்நாள் முழுவதும் தவிர்த்தார். நம் நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட உத்தமர் காந்தியடிகள் ஜனவரி 30, 1948அன்று அகால மரணத்தைத் தழுவினார்.
1949ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 12ஆம் நாள் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அண்ணல் காந்தியடிகளின் அஸ்தி கரைக்கப்பட்டு அதன் நினைவாக அமைக்கப்பட்ட காந்தி மண்டபம் மே 30,1956அன்று திறந்து வைக்கப்பட்டது.
அண்ணலுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னையில் காந்தி மண்டப வளாகம் ஜனவரி 27, 1956 அன்றும், இவ்வளாகத்தில் அண்ணல் காந்தியடிகளின் அருங்காட்சியகமும் அக்டோபர் 02, 1979 அன்றும் திறந்து வைக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.