சென்னை: திமுக சார்பில், ஜனவரி 25ஆம் தேதி தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள நிலையில், சென்னையில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளதாக, திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் கூறியுள்ளார்.
திமுக சார்பில் வருகிற ஜனவரி 25ஆம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றவுள்ளனர்.
இது குறித்து திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனவரி 25ஆம் தேதி திமுக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது. நாட்டின் விடுதலைக்காக மட்டுமல்லாமல், ஒரு மொழிக்காக தங்களது வாழ்க்கையே சுருக்கி கொண்டு கருகியவர்கள் தமிழக மக்கள் மட்டுமே.
அந்த வகையில், இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பெற்று உயர் நீத்த நூற்றுக்கணக்கானோர்களின் வீரத்தை நினைவு கூறும் வகையில், ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி, திமுக மாணவர் அணி சார்பில், மொழிப் போர் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.
சென்னை அண்ணா நகரில் நடைபெறக்கூடிய வீர வணக்க நாள் பொதுக் கூட்டத்தில், தமிழக முதல்வர் கலந்து கொள்ள உள்ளார். ஆவடியில் நடைபெறுகின்ற பொதுக் கூட்டத்தில், திமுக பொதுச்செ யலாளர் துரைமுருகனும் பங்கு பெற்று உரையாற்றுவார். அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தாமோ அன்பரசன் ஆகியோர் இணைந்து, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட பகுதியில் நடைபெறும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார்கள்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டங்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றவுள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.