சென்னை: சட்டப்பேரவையில் இன்று (மே 10) 2022-23ஆம் ஆண்டிற்கான காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு பிறகு சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலுரை அளித்து பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளிட்டார்.
சட்டப்பேரவையில் உள்துறை மானிய கோரிக்கை விவாத பதிலுரையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மாநிலத்தில் சென்னையைத் தவிர மற்ற பகுதியில் உள்ள சிசிடிவி களை பராமரித்துக் கண்காணிக்கக் கூடுதல் நிதி ஒதுக்கப்படும். மேலும் மதரீதியான வன்முறைகளுக்கு தமிழ்நாட்டில் ஒரு போதும் இடம் கிடையாது. விரைவில் 3000 புதிய காவலர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்’’ என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,’’ கல்பாக்கம் அணு உலை நிலையத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெற அரசு ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கும் எனவும்; காவல்துறை மக்களுக்குக் கம்பீரமாகப் பாதுகாப்பு அளிக்கும் துறையாக மாறி உள்ளது’’ என்றும் குறிப்பிட்டார்.
’’அதிமுக ஆட்சியில் வளர்த்து விடப்பட்ட போதை கலாசாரங்களுக்கு நிச்சயம் முற்றுப்புள்ளி வைப்போம். திமுக ஆட்சியில் முழுக்க முழுக்க கருத்துச் சுதந்திரம் அளிக்கப்பட்டு வருகிறது. அநாகரிக நிலையைத் தாண்டும் போது தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உண்மைக்கு மாறான வழக்குகள் எதுவும் திமுக ஆட்சியில் இல்லை’’ என தெரிவித்தார்.