வயது முதிர்வு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், நேற்று (ஆக.05) மாலை 3:42 மணிக்கு காலமானார்.
அவரது மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் இரங்கல் செலுத்திவரும் நிலையில், சென்னை, தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
அதிமுகவின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான மதுசூதனன், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில், 1991 முதல் 96ஆம் ஆண்டு வரை கைத்தறித்துறை அமைச்சராக இருந்துள்ளார். இவரை, ஜெயலலிதா கட்சியின் அவைத் தலைவராகவும் நியமித்திருந்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, சட்டப்பேரவை உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை தொடங்கியபோது, அவருக்கு முதலில் ஆதரவளித்த அதிமுக தலைவர்களில் முக்கியமானவர் மதுசூதனன்.
மேலும், அவர் சிகிச்சையில் இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் நலம் விசாரித்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஏறுமுகம் காணும் கரோனா: மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை