சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மிக்ஜாம் புயல் காரணமாகக் கடந்த இரண்டு நாட்களாகச் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்துவந்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
மேலும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மேற்பார்வையில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உடனடியாக தேவையான நிவாரணம் வழங்கப்பட்டு வருவதுடன், சீரமைப்புப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாகச் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு முதலமைச்சர் நேரில் சென்று, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின், "வரலாறு காணாத வகையில், பெருமழையானது நேற்றைய தினம் கொட்டி தீர்த்திருக்கிறது. பெருநகர சென்னை மாநகராட்சியின் மழை அளவீடுகளின்படி, மீனம்பாக்கத்தில் 43 செ.மீ. பெருங்குடி 44 செ.மீ பதிவாகி இருக்கிறது.
தற்போது 9 மாவட்டங்களில், 61,666 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான அத்தியாவசியமான பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மழை நிற்பதற்கு முன்பாகவே, தமிழகத்தில் உள்ள மற்ற மாநகராட்சி பகுதிகளில் இருந்து தூய்மைப் பணியாளர்கள் உட்பட பல்வேறு பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சி பணியாளர்களோடு இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலையை விரைவில் திரும்பச் செய்வதற்கான அனைத்து பணிகளையும், முனைப்போடு மேற்கொண்டு வருகிறார்கள். இப்பணிகளை ஒருங்கிணைத்து 14 அமைச்சர்கள் களத்தில் இருந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். பல இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் இதற்காக நியமிக்கப்பட்டு அவர்களும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
வரலாறு காணாத மழையின் காரணமாகச் சேதம் அடைந்தவற்றை செய்வதற்கான பல்வேறு பணிகளுக்காக மத்திய அரசிடம் 5000 கோடி ரூபாய் உடனடியாக ஒதுக்கவேண்டும் என்று கடிதம் அனுப்பப் போகிறோம். இது குறித்து நாடாளுமன்றத்திலும் திமுக உறுப்பினர்கள் பேச இருக்கிறார்கள்.
இதுவரை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதில் 75 சதவீத இடங்களில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசிடம் நிதியைக் கேட்டிருக்கிறோம். என்ன சொல்கிறார்கள் என்று பார்த்துவிட்டு, நம்முடைய நிதி ஆதாரத்தைப் பொறுத்து, என்ன செய்யமுடியுமோ அதைச் செய்வோம்.
மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இணையத்தில் உதவி கேட்ட நடிகர் விஷ்ணு விஷால்..! படகில் மீட்ட மீட்புக்குழு!