சென்னை: தமிழ்நாட்டிற்கு போதிய தடுப்பூசிகளை வழங்கக்கோரி ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலின் வேகம் குறைய தொடங்கியுள்ளது. மாநில அரசு, தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இந்த மாத தொடக்கத்திலேயே தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது.
மாநிலத்தின் தேவைக்கேற்ப தடுப்பூசிகள் இல்லாததால், தடுப்பூசி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையை சரிசெய்ய போதுமான அளவிலான தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு இன்று (ஜூன்.2) கடிதம் எழுதியுள்ளார்.
ஒன்றிய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,’செங்கல்பட்டில் அமைந்துள்ள தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலையை விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கடந்தவாரம் பிரதமர் மோடிக்கு நான் கடிதம் எழுதினேன்.
மாநில அரசின் கீழ் இயக்குவது அல்லது ஒன்றிய அரசும், மாநில அரசும் சேர்ந்து ஆலோசித்து அதை நடத்த ஒரு நிறுவனத்தின் கீழ் அனுமதி அளிப்பது என கேட்டிருந்தோம். ஆனால் தற்போது மத்திய அரசே குறிப்பிட்ட நிறுவனம் மூலம் தானே இயக்குவதற்கு முடிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தற்போது தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ளது. இதை அவசரத் தேவை என்பதைக் கருத்தில் கொண்டு, மாநில அரசின் கீழோ, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழோ உடனடியாகத் தடுப்பூசி மையத்தை இயக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கிட வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் தேசிய சொத்தான தடுப்பூசி மையத்தை முழு உபயோகத்துக்குக் கொண்டுவர நாங்கள் பரிபூரண ஆதரவை அளிக்கத் தயாராக இருக்கிறோம்.
கடந்த கடிதத்தில் மக்கள்தொகை அளவுக்கேற்ப தடுப்பூசி ஒதுக்கப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். அரசு மற்றும் அரசு சாரா முறையில் இறக்குமதி மூலம் மாதம் 50 லட்சம் டோஸ் கிடைக்கப்பெற வேண்டும், ஆனால், தற்போதைய நிலவரப்படி வெளியிலிருந்து 25.84 டோஸ்களும், அரசு மூலம் 16.74 லட்சம் டோஸ்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் தடுப்பூசி அளவை அதிகரித்து அளிக்க வேண்டும். தடுப்பூசியை எவ்வளவு சீக்கிரம் ஒதுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஒதுக்கிட வேண்டும். தமிழ்நாடு போன்று மக்கள் தொகையுள்ள மாநிலங்களுக்கு ஒதுக்கப்படுவது போன்று தமிழகத்துக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும்.’எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'கரோனா படிப்படியாகக் குறைந்து வருகிறது’ - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்