சென்னை: மாநில அளவிலான மூன்றாவது மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (DISHA) கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் வேளாண்மை - உழவர் நலத்துறை ஆகிய நான்கு துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய இருப்பதாக தெரிவித்தார்.
10 ஆயிரம் சுய உதவிக் குழுக்களை உருவாக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு: தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சமூக ஒருங்கிணைப்பு மற்றும் நிறுவன கட்டமைப்புக்காக புதிதாக 10 ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அவற்றுக்கு சுழல் நிதியாக வழங்க 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 5 ஆயிரம் சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியாக 75 கோடி ரூபாயும், 3 ஆயிரம் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு வறுமை நிலை குறைப்பு நிதியாக 7.50 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 10 ஆயிரம் புதிய சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடிப்படை பயிற்சி வழங்கவும், ஊக்குநர் மற்றும் பிரதிநிதிகளுக்கு பயிற்சி வழங்க 3.30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்த சிறப்பு நிதி: மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் சுகம்யா பாரத் அபியான் (தடையற்ற சூழலை உருவாக்குவதற்கான இயக்கம்) சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகள் அணுகத்தக்க சூழலை ஊக்கப்படுத்துவதற்காக தணிக்கை நடவடிக்கையினை மேற்கொள்ள சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
மாநிலம் முழுவதும் 93 கோட்டாட்சியர் அலுவலகங்கள், 312 வட்டாட்சியர் அலுவலகங்கள், 385 வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் என மொத்தம் 790 கட்டடங்களில் ரூ.4.74 கோடி செலவிலும், 200 சுற்றுலாத் தலங்களில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவிலும் தணிக்கைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள மொத்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் எண்ணிக்கை 284. இதில் 2021 வரை முதல் கட்டமாக 63 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் இணைக்கப்பட்டன. 2021-2022ஆம் ஆண்டில், இரண்டாம் கட்டமாக 64 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும் மற்றும் 2023ஆம் ஆண்டில், மூன்றாம் கட்டமாக 30 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும் மின்னணு தேசிய வேளாண் சந்தையில் இணைக்கப்பட்டுள்ளன.
காலை உணவுத் திட்டத்தில் 46 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நடப்பாண்டில் விரிவாக்கம் செய்யப்பட்டு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன சுய உதவிக் குழு உறுப்பினர்களைப் பயிற்றுவித்து, அவர்களின் பங்கேற்பின் மூலம் தமிழ்நாட்டில் அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்தப்படும் எனவும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் பிரதான் மந்திரி போஷன் சக்தி நிர்மன் - சத்துணவுத் திட்டத்தின் கீழ் 2022-2023ஆம் ஆண்டில் 46 லட்சத்து 70 ஆயிரத்து 458 மாணவர்கள் பயனடைந்து உள்ளனர்.
மதி எக்ஸ்பிரஸ் வாகனங்கள்: மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு புதிய முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக ‘மதி சந்தை’ என்ற இணைய வழி விற்பனை தளம் உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை அவர்களுக்குள்ளாகவும், பிற பெரும் வணிக நிறுவனங்கள் மூலமாகவும் விற்பனை செய்வதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவில் வாங்குவோர் - விற்போர் சந்திப்பு நடத்தப்படும்.
மகளிர் உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சுய காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் முக்கிய சுற்றுலாத் தலங்களில் மதி அங்காடிகள் நிறுவப்படுவதுடன், சிறப்பு சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக 'மதி எக்ஸ்பிரஸ் வாகனங்கள்’ வழங்கப்படவுள்ளன. மேலும், சுய உதவிக் குழுக்களால் இயக்கப்படும் 'மதி திணை உணவகங்கள்’ ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களிலும் செயல்படுத்தப்படவுள்ளன.
“நன்றே செய் - அதையும் இன்றே செய்” என்ற வகையில் எல்லாருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து மக்களுக்கு நன்மை தரும் திட்டங்களை சிறிதும் தாமதமின்றி செயல்படுத்தி, திட்டங்களின் பயன் முழுமையாக மக்களைச் சென்றடைய துறைத் தலைவர்களும், அரசு அலுவலர்களும் முழுமனதுடன் செயல்பட வேண்டும் எனவும், தங்களுக்கு கீழ் பணியாற்றுவோரும் அவ்வாறு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், ஆ.ராசா, சு.திருநாவுக்கரசர், திருமாவளவன், கே.நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், நா.எழிலன், ஜே.எம்.எச்.அசன் மவுலானா, கே.ஏ. செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் பி. செந்தில் குமார், துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : தமிழிசைக்கு எதிராக விமானத்தில் கோஷம்.. மாணவி லூயிஸ் சோபியா வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!