சென்னை: வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஆவின் துறை, கால்நடை துறை ஆகிய துறைகள் சார்பில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டடங்களைத் திறந்து வைத்தும், பல்வேறு கட்டடங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜனவரி 19 ஆம் தேதி ) காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 23 கோடியே 74 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள், கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் குடியிருப்பு கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
மேலும், 114 கோடியே 48 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
ஈரோட்டில் விரிவாக்கப்பட்ட கால்நடைத் தீவன தொழிற்சாலை மற்றும் கிருஷ்ணகிரியில் புதிய தாது உப்புக் கலவை தொழிற்சாலை, தாது உப்புக் கலவையின் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு, தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் ரூ.67.50 இலட்சம் மற்றும் ஒன்றிய பங்களிப்பாக ரூ.67.50 இலட்சம், என மொத்தம் 1 கோடியே 35 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 12 மெட்ரிக் டன் திறன் கொண்ட தாது உப்புக் கலவை தொழிற்சாலையை ஆகியவற்றை அவர் திறந்து வைத்தார்.
இதனையடுத்து, ஆவின் நிறுவனத்தால் புதியதாகத் தயாரிக்கப்பட்ட பிரீமியம் மில்க் கேக், யோகர்ட் பானம் (மாம்பழம் மற்றும் ஸ்ட்ராபெரி சுவையில்), பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ் மற்றும் டெய்ரி ஒய்ட்னர் ஆகிய ஐந்து புதிய பொருட்களை அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.