சென்னை: மு.க. ஸ்டாலின் இன்று (ஜனவரி 20) தலைமைச் செயலகத்தில், சதுரங்கப் போட்டியில் 2019ஆம் ஆண்டு சர்வதேச மாஸ்டர் பட்டம், 2022ஆம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுவன் பரத் சுப்ரமணியனுக்கு எட்டு லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலையை வழங்கினார்.
சென்னையில் 9ஆம் வகுப்பு படித்துவரும் பரத் சுப்ரமணியன் 2013ஆம் ஆண்டுமுதல் தனது ஐந்தாவது வயதிலிருந்து மாநில, தேசிய, சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்றுவருகிறார். சர்வதேச போட்டிகளில் தொடர்ச்சியாகப் பங்கேற்று சிறப்பாக விளையாடிய பரத் சுப்ரமணியன் 2019ஆம் ஆண்டு சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்றார்.
மேலும், 2022ஆம் ஆண்டில் தனது 14ஆவது வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
சிறுவனின் சாதனையைப் பாராட்டி 2019ஆம் ஆண்டு சர்வதேச சதுரங்க மாஸ்டர் பட்டம் வென்றமைக்காக 3 லட்சம் ரூபாயும், 2022ஆம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றமைக்காக 5 லட்சம் ரூபாயும் சேர்த்து, மொத்தம் 8 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலையினை ஸ்டாலின் இன்று வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலர் அபூர்வா, பயிற்சியாளர் ஷியாம் சுந்தர், பரத் சுப்ரமணியத்தின் பெற்றோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: ஆசிரியர்களுக்கு ஜன. 22ஆம் தேதி விடுமுறை அறிவிப்பு