சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் முதலில் மறைந்த முன்னாள் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்கள் கி.வேணு, பி.வெங்கடசாமி, பா.வேல்துரை, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீட நிறுவனர் பங்காரு அடிகளார், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யா ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்ட்டது.
இதனையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தனித்தீர்மானம், ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றும் விதமாக முதலமைச்சர் முன்மொழிந்தார். மேலும், ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காதது, சட்டவிரோதமாகவும், ஜனநாயகத்திற்கு எதிராகவும் உள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், மத்திய அரசுடன் இருக்கும் இணக்கமான உறவைப் பயன்படுத்தி திட்டங்களை சீராக்க ஆளுநர் முயற்சிக்கலாம் எனக் கூறிய முதலமைச்சர், ஆனால் அவர் அதனை செய்வதில்லை என குற்றம் சாட்டினார். மேலும், ஆளுநர் பதவி என்பது அகற்ற வேண்டிய பதவியாக இருந்தாலும், அந்த பதவி இருக்கும் வரை மக்களாட்சிக்கு அடங்கி இருக்க வேண்டியது மரபு ஆகும் என தெரிவித்தார்.
மேலும் பேசிய முதலமைச்சர், “மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதாக இல்லை. காய்ச்சல் தொண்டை வலியால் சில நாள் ஓய்வு எடுத்தாலும், உடல் நலனை விட இந்த மாநில மக்கள் நலன், தமிழ்நாட்டு நலன், பேரவையின் நலன்தான் அதை விட முக்கியம் என மன உறுதியுடன் உங்கள் முன் நிற்கிறேன்.
இந்திய ஜனநாயகத்தை மோசமான சூழலில் கொண்டு செலுத்திவிடும் அச்சத்தில்தான் உங்கள் முன் நிற்கிறேன். ஆட்சிக்கு தடைக்கல் வந்தால் அவற்றை எதிர்க்கும் தடந்தோள்கள் உண்டு என்பதை மெய்ப்பித்து வருகிறோம். பல நூறு உறுப்பினர்களைக் கண்ட, ஜனநாயக விழுமியங்களைக் கொண்ட சட்டமன்றம், தமிழக சட்டமன்றம்.
சட்டமன்றம் எப்படி நடக்க வேண்டும் என்ற நெறிமுறைகளை உருவாக்கிய சட்டமன்றம், தமிழக சட்டமன்றம். இங்கிலாந்தில் இருந்து தமிழக சட்டமன்றத்தை வந்து பார்த்து விட்டுச் சென்றனர். இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் தலையாய மாநிலம் தமிழகம். இன்று நாம் காணும் வளர்ச்சி, நம் தலைவர்கள் உருவாக்கிய சட்ட திட்டங்களால் கிடைத்தது.
பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்களின் கொள்கைகளைப் பின்பற்றி பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை வழங்கி வருகிறோம். தமிழகத்தை வளப்படுத்தும் திட்டம் மட்டுமின்றி, இந்தியாவிற்கே வழிகாட்டும் திட்டமாக தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் உள்ளது.
இதை தடுக்கும் வகையில் சில இடையூறுகள் உள்ளது. அந்த இடையூறுகளால்தான் சிறப்பு சட்டமன்றத்தை கூட்டியுள்ளோம். அவசர அவசியம் கருதி, இன்று தமிழக மக்களின் நலன் கருதி, ஜனநாயகத்தை நிலைநாட்ட சட்டத்தை பாதுகாக்க கூட்டியுள்ளேன். நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை.
ஆளுநர் திருப்பி அனுப்பிய முன்வடிவை மீண்டும் அனுப்பி வைக்க உள்ளோம். ஆளுநர் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் பாலமாக இருக்கலாம். ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை பெற்றுத் தரலாம். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான நடவடிக்கையை எடுக்கலாம். ஆளுநர் தெரிவிக்கும் கருத்துகளை வைத்து பார்க்கும்போது, தமிழ்நாடு வளர்வதைக் காண பொறுக்காத காரணத்தினால், ஆளுநர் இத்தகைய போக்கை கடைபிடிக்கிறார்.
12 சட்ட முன்வடிவுகள், வேறு சில கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்காதது, சட்ட விரோதம், மக்கள் விரோதம், மனசாட்சிக்கு விரோதம். மத்திய அரசுடனான நெருக்கத்தைப் பயன்படுத்தி தமிழகத்துக்குத் தேவையான நிதியை அவர் பெற்றுத் தர முடியும். ஆளுநர் மாளிகையில் தினந்தோறும் யாரையாவது கூட்டி வைத்து, வகுப்பு எடுத்து தவறான பாடம் நடத்தி, விழாக்களில் விதண்டாவாதம் செய்கிறார், ஆளுநர்.
கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் இயற்றும் சட்டத்தை தடுக்கும் சக்தி முளைத்திருக்கிறது. ஒட்டுமொத்த தமிழக மக்களின் நலன் கருதியும், அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்கவும் இந்த சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. நாம் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு, தான் அனுமதியை நிறுத்தி வைப்பதாகக் கூறி கடந்த 13ஆம் தேதி திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.
தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் ஆளுநர் மசோதாக்களை திருப்பி அனுப்பி வைத்திருப்பது, தமிழக மக்களை அவமதிக்கும் செயல். ஆளுநரின் இத்தகைய செயல் சட்டவிரோதம், ஜனநாயக விரோதம், மனசாட்சி விரோதம். அரசியல் சட்டத்திற்கு மாறாக அரசுடன் ஆளுநர் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.
ஆளுநருக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளனர். பிரதமருக்கும் இது தொடர்பாக கடிதம் எழுத உள்ளேன். ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி என்றாலும், அது இருக்கும் வரை மக்களாட்சி தத்துவத்திற்கு அடங்கி இருக்க வேண்டியதுதான் மரபாகும்.
ஆட்சி பொறுப்பேற்றது முதல் இந்திய நாடு இதுவரை கண்டிராத பல்வேறு முன்மாதிரி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதை அரசியல் ரீதியாக சகித்துக் கொள்ள முடியாமல் சிலர், ஆளுநர் பதவியை வைத்து அரசியல் செய்கின்றனர். பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் அழுத்தம் தருகின்றனர். நீதிமன்றம் தலையில் குட்டியவுடன் இப்போது சில கோப்புகளுக்கு அனுமதி வழங்கி நாடகம் ஆடுகிறார் ஆளுநர். கருணாநிதி சொன்னதைப் போல் மக்களுக்கும், மனசாட்சிக்கும் மட்டுமே நாங்கள் கட்டுப்பட்டவர்கள்” என்றார் முதலமைச்சர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்; பங்காரு அடிகளார், என்.சங்கரய்யாவுக்கு இரங்கல் தீர்மானம்.. ஈபிஎஸ் முக்கிய ஆலோசனை!